Thursday, April 14, 2016

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன் - சிறுகதை


அட்மிஷன் வாங்கலையோ  அட்மிஷன் - சிறுகதை

எல்.கே.ஜி.  அட்மிஷன் பீஸ் விவரம்

1. ஆயா பீஸ்                     ரூ. 1,00,000
2. தாத்தா பீஸ்                    ரூ. 1,00,000
3. மேசை நாற்காலி பீஸ்             ரூ. 3,00,000
4. கட்டிட பீஸ்                     ரூ 5,00,000
5. சாக் பீஸ் பீஸ்                   ரூ 1,00,000
6. விளையாட்டுபீஸ்                  ரூ. 3,00,000

      இதைத்தொடர்ந்து வெள்ளையடிக்கும் பீஸ். சுவர் கட்டும் பீஸ், செருப்பு பீஸ், துடைப்பம் பீஸ், என்று நீண்டிருந்த பட்டியல் பத்தொன்பது லட்சத்து தொண்ணூராயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது என்று முடிந்திருந்தது.

மார்த்தாண்டன் த்ரி இன் ஒன் பள்ளியின் எதிரில் இருந்த கரும்பலகையில் ஒட்டியிருந்தது அந்த பட்டியல்தான் மேலே இருப்பது.

      மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக  த்ரி இன் ஒன் பள்ளி  பிரபலமானது.

      நர்சரி பள்ளியாக துவங்கிய மார்த்தாண்டன் பள்ளி இப்போதுஆரம்பப்பள்ளி,  மெட்ரிக்குலெஷன் பள்ளி,  என்று பெருகியதால் இதற்கு மார்த்தாண்டன் த்ரி இன் ஒன் பள்ளி என்று பெயர் வந்தது.

      மதுரை மாவட்டத்திலேயே மாணவர்களை இலவசமாக சேர்த்துக் கொள்ளும் ஒரேபள்ளி மார்த்தாண்டன் பள்ளிதான். ஆனால் மேலே குறிப்பிட்ட பிரத்தியேகமான பீஸ்கள் மட்டும் கட்ட வேண்டும். ஆனால் அட்மிஷன் இலவசம்தான்.

      அந்த விவரம்தான் நோட்டீசாக கரும்பலகையில் ஒட்டியிருந்-- தது.  பெற்றோர்கள் இங்கும் அங்குமாக தங்கள் குழந்தைகளுடன் ஆலாய் பறந்து கொண்டிருந்தனர்;. அவர்களின் விரல்களைப் பிடித்தபடி, குழந்தைகள் ஒற்றைப்பெட்டி சரக்கு ரயில் பெட்டி போல வரிசையாக போய்க் கொண்டிருந்தனர்.

      அட்மிஷன் ஆரம்பித்தால் போதும். அழகர் ஆற்றில் இறங்கிய  மாதிரி மார்த்தாண்டன் பள்ளி மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். அட்மிஷனுக்கு முன்னால் முதலில் தங்கள் குழந்தைகளுடன் பள்ளி முதல்வரை சந்திக்க வேண்டும். அதன்பின்னர்தான் அட்மிஷன்.

      எனவே தல்லாகுளத்தில் முதல்வர் அறையில் ஒன்று. அட்மிஷன் கவுண்டரில் ஒன்று என இரண்டு வரிசைகள் மலைப்பாம்பாய் மெல்ல ஊர்ந்துக் கொண்டிருந்தன.

      ஒருவரிசை தல்லாக்குளத்திலிருந்து தத்தனேரி வரையிலும் இன்னொன்று ஒத்தக்கடை வரையிலும் நீண்டிருந்தது.

      வரிசையைக் கண்டு மலைத்துப் போன சில பெற்றோர்கள் இங்குமங்குமாக உதிரியாக அலைந்து கொண்டிருந்தனர். க்யூவரிசைச் சீட்டுகள் சினிமா டிக்கட்டுகள் மாதிரி பிளாக்கில் ஒருபக்கம் விற்பனை நடந்துகொண்டிருந்தது.

      சிலர் வரிசையைப் பிடிக்க அவசரம் அவசரமாக ஆட்டோ பிடித்து தத்தனேரிக்கும் ஒத்தகடைக்கும் புறப்பட்டனர்.

      கூட்டத்தை சமாளிக்க ஏகப்பட்ட ஆயுதம் தாங்கிய  போலீஸ்காரர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர்.

      போலீஸ்காரர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை கையிலேந்தியபடி விழிப்புடன் நின்று கொண்டிருந்தனர்.

      “இந்த பள்ளிக்கொடம் கூட இல்லைன்னா  நம்மமாதிரி ஏழை பாழைங்க ….  என்னா பண்ணா  முடியும் ?” என்றார் அட்மிஷன் வரிசையில் நின்றிருந்த ஒருத்தர்.

      “எனக்குத் தெரிஞ்சி, இந்த மாதிரி இலவசமா அட்மிஷன் செய்யற பள்ளிக்கூடம் இந்த வட்டாரத்துல எதுவுமே இல்லை….”  என்றார் வரிசையில் அவருக்கு பின்னால் நின்றவர்.

      இந்த பள்ளிக்கூடத்தை “ஒரு தர்ம ஸ்தாபனம் மாதிரி நடத்துறாரு…. நல்ல மனுஷன் … மார்த்தாண்டன் மாதிரி ஒரு மனுஷனை பார்க்க முடியாது…..”  என்றார் இன்னொருத்தர்.

      ஆமா….. “ ஆனை’ய    சும்மா தர்ரேன்… அங்குசம் ஆயிரம்பொற்காசு”ன்னு  சொன்ன கதையா இருக்கு. அட்மிஷன் இலவசமாம்.   ஆனா  ஆயா பீஸ் தாத்தா பீஸ்  ன்னு லட்சத்துல அடுக்கறாங்க….” என்றார் வரிசைக்கு வெளியே நின்றிருந்த ராஜசிம்மன்.

      “ஏய்யா … குழந்தைகள சேத்துட்டு நம்ம போயிடறோம். அதை பாத்துக்க ஆயா வேணாமா ? அதுக்குத்தான் ஆயா பீஸ்…” என்று சூடாக பதில் சொன்னார் ஒருத்தர்.

      ஆயா பீஸ் சரி… என்னய்யா அது தாத்தா பீஸ்…? என்றார் எரிச்சலாக ராஜசிம்மன்.

      “குழந்தைங்களுக்கு ஒரு பாடத்தை கதை மூலமா சொன்னாத்தான் புரியும். அதுக்காகத்தான் இந்த பள்ளிக்கூடத்துல கதை சொல்றதுக்காக முப்பது தாத்தாமார்களை வாத்தியாராக போட்ருக்காங்க… நம்ம இதை பாராட்டணும்… அதை விட்டுட்டு” என்று சலித்துக் கொண்டார் இன்னொருத்தர்.

      “அவருக்கு வரிசையில நிக்க எடம் கெடைக்கல. அந்த வயிற்றெரிச்சல். சீச்சீ  இந்தப்பழம் புளிக்கும் கதை சொல்றார்” என்றார் அடுத்து நின்றவர்.

      “எடம் கெடைக்கலன்னா…? சும்மா கிடைச்சிடுமா ? நாமெல்லாம் ஒரு வாரமா துண்டு போட்டு வரிசையில எடம் புடிச்சி இருக்கோம்”

      “அடுப்பு எரிஞ்சாத்தானப்பா பொரி பொரியும்…?  வெறுங்கையில முழம்போட முடியுமா ? பணங்காசு செலவு பண்ணாம பசங்கள பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வைக்க முடியுமா…?  என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டிருக்க, ராஜசிம்மன் வெறுப்பால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

      ராஜசிம்மனுக்கு தன்னுடைய பையனை எல்.கே.ஜி’ல் சேர்த்தாக வேண்டும். அவனுக்கு இந்த மாதிரி பள்ளிக்கூடம் அட்மிஷன் இதுபற்றி ஒன்றும் தெரியாது.

      ஆனால் யாரும் தன்னை ஏமாற்றிவிட அனுமதிக்க மாட்டான்  ராஜசிம்மன். அவன் பையனுக்கு அட்மிஷனே கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவன் ஏமாற தயாராக இல்லை.

      இதற்கு ஒரு சரியான காரணம் இருந்தது. அதைத் தெரிந்துக் கொள்ள இன்னும் கூடுதலாக ராஜசிம்மனைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

      ராஜசிம்மன் பார்த்தது  வெளியில் சொல்ல முடியாத தொழில். மற்றவர் பலவீனத்தை முதலீடாக கொண்ட தொழில். கொள்ளை. அதுவும் பகல் கொள்ளை. நிறைய பணம் வந்தது. ஆனால் பையனுக்கு அட்மிஷன் வாங்குவது எப்படி என்றுதான் தெரியவில்லை.

      காலியாக இருந்த பள்ளிக்கூட கட்டிடங்களின் ஊடாக ஏதோ சிந்தனை  வயப்பட்டவனாய் நடந்தான் ராஜசிம்மன்.

      “சார்… எங்க சார் போறீங்க….?” என்று கேட்டபடி  பள்ளிக்கூட வாட்ச்மேன் எதிரில் வந்தான்.

      “சும்மா … உங்க பள்ளிக்கூடத்தை சுத்திப் பார்க்கலாம்ன்னுதான் …. நீ என்னப்பா வாட்ச்மேனா ?”

      “ஆமா  சார் ….”

      “அதுசரி  உங்க மொதலாளி  மார்த்தாண்டன் இதுக்கு மொதல்ல என்னா தொழில் பாத்தாரு….?”

      “எங்க மொதலாளி இதுக்கு மொதல்ல புறாவும், முயலும், வளத்தாரு சார்… அந்தப் புறாக் கூண்டை வச்சித்தான் சார் நர்சரி ஸ்கூல் ஆரம்பிச்சாரு”

      “முயல் கூண்டு….?”

      அதை வச்சித்தான் சார் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலை ஆரம்பித்தார்.

“உங்க மொதலாளி குரங்கு பண்ணை ஒண்ணும் வைக்கலயா…?” கேட்டான் ராஜசிம்மன் எரிச்சலாக.

      “அது இருந்திருந்தா எப்பவோ காலேஜ்” ஆரம்பிச்சிருப்பார் சார் என்று சொல்லி சிரித்தான்.

      “ஆனாலும் நீங்க வாங்கற பீஸ் ஜாஸ்தி…..”

      “என்ன சார் இதைப்போய் ஜாஸ்தின்னு சொல்றீங்க…?

      “பணம்ன்னா குடுத்திடலாம் சார்…  ஆனா காட்டுராணி ஸ்கூல்ல புலிப்பால் கொண்டு வந்தால்தான் அட்மிஷன்….தெரியுமா…? "

மார்த்தாண்டன் ஸ்கூல் மாதிரி காட்டுராணி ஸ்கூலும் பிரபலமானது.

      ராஜசிம்மன் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்து நின்றான்.

      “அவ்ளோ ஏன் சார்…?  நம்ம மெரிட் நர்சரி ஸ்கூல்ல      “ஒபாமாகிட்ட சிபாரிசு லெட்டர்  வாங்கிட்டு வந்திருக்காங்க. அவருக்கு 10 சீட்டு ஒதுக்கி இருக்காங்களாம்”

      “என்னப்பா உண்மையாவா சொல்ற…?” என்று கேட்டுவிட்டு ஈ நுழைவது தெரியாமல் வாயைப் பிளந்துக் கொண்டு  நின்றான் ராஜசிம்மன்.

      “ஸ்கூல்ன்னா என்னா…?  கத்தரிக்காய் வியாபாரமா….?  ஆரம்சிச்சு நடத்துனுமே சார்… எல்லோராலும் நடத்த முடியுங்களா….?”

      உறைந்து போய் நின்றிருந்த ராஜசிம்மன் மூளையில்,       ஏதோஒன்று சுரீர் என்று தைத்தது.

      “நீ  என்ன சொன்னே…?  இன்னொருதரம் சொல்லு”

      வாட்ச்மேன்  இன்னொருதரம் சொன்னான். இன்னொருதரம் அது அதே இடத்தில் அதேமாதிரி இன்னொருதரம் தைத்தது.

      “ஸ்கூல்’ன்னா என்னா…?  கத்தரிக்காய் வியாபாரமா…? ஆரம்பிச்சி நடத்தணுமெ சார்….  எல்லோராலும் நடத்த முடியுங்களா…?”

      குப்பென்று ஒரு சந்தோஷம்  ராஜசிம்மன் முகத்தில். பாக்கெட்டில் கையை விட்டு, கையில்எடுத்தான். மொடமொடவென நூறு ருபாய் நோட்டு. அதனை அவன் கையில் திணித்துவிட்டு வேகமாய் நடந்தான்.

      வாட்ச்மேன் நூறு ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டு பேய் முழி முழித்தார். ஒரு தடவைகூட கேட்காமல் இப்படி யாரும் கொடுத்தது கிடையாது. ஒருவேளை பைத்தியமாக இருப்பானோ ?

      ராஜசிம்மன் நேராக மீனாட்சிஅ ம்மன் கோயில் எதிரே இருந்த புதுமண்டபத்துக்கு போனான். “அண்ணாச்சி ஆயிரம் புறாக் கூண்டு வேணும் அவசரம்” என்று ஆர்டர் கொடுத்தான்.

      புதுமண்டபத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பினான். தனது வீட்டில் ஐந்துக்கு நாலு அளவிலிருந்த சமையலறையை காலி செய்தான்.

      ராஜசிம்மன் இலவச அட்மிஷன் நர்சரிப் பள்ளி என்ற பெயர்ப் பலகையை புறாக்கூண்டின்மீது மாட்டினான்.

      அடுத்த வாரம் ராஜசிம்மன் நர்சரிப் பள்ளியில் இலவச அட்மிஷனுக்கு பெற்றோர்களின் கூட்டம், அழகர் ஆற்றில் இறங்கியது மாதிரி பெற்றோர் கூட்டம்  அலைமோதியது.

(Image Courtesy: Google)

               
   
     
     

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...