அஞ்சலை - சிறுகதை
ANJALAI- SHORT STORY
உங்களுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி… பிள்ளைங்க… பேசாம நீங்க ஆபீஸையே கல்யாணம்; பண்ணிக்கிட்டு அங்கயே செட்டில் ஆகியிருக்கலாம். ஆபீஸாம்… ஆபீஸ்…. என்றாள் மேரி ஜோஸ்பின்.
இப்படிப்பட்ட தன் மனைவியின் அர்ச்சனைகள் பால்ராஜ் ஜோசப்புக்கு ரொம்ப காலமாய் பழகிப் போயிருந்தது. இன்று கொஞ்சம் டோஸ் ஜாஸ்தி. ஆனாலும் அவர் அமைதி காத்தார். புயலே அடித்தாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள பழகி இருந்தார். எதுவுமே நடக்காததைப்போல அமைதியாக ஆபீசுக்கு கிளம்பினார்.
பா.ஜோ’ வைப் பொருத்தவரை வீட்டின் மேல்அதிகாரி மே ஜோதான். இனி பா.ஜோ என்றால் பால்ராஜ் ஜோசப், மே.ஜோ என்றால் மேரி ஜோஸ்பின்.
ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்துக் கொண்டிருக்கும் ஒரு அரசு ஆபீசில்; மேனேஜர் பா.ஜோ.
ஆந்த ஆபீசுக்குப் போய் கோபத்துக்கு இன்னொரு பெயர் சொல்லுங்கள் பார்ப்போம் என்று கேட்டால் பட்டென்று சொல்வார்கள் 'பா.ஜோ" என்று. அவர் அடுப்படியில்தான் மியாவ். ஆபீஸ் அவர் கர்ஜனைக்கு கிடுகிடுக்கும்.
இதற்குப் பலகாரணங்கள் உண்டு. ஆனால் அவை பா.ஜே‘வுக்கும் மேஜோ’வுக்கும் அந்தரங்கமான சமாச்சாரங்கள்;. அதில் மூக்கை நுழைத்தல் அதிகப்பிரசங்கித்தனம்.
அவை நமக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாதவை. புயலுக்கு முன்னால் தென்படும், கடலைப் போல், அமைதியாக பாஜோ சூட்கேசும் கையுமாக வீட்டை விட்டு வெளியேவந்தார். வழக்கம் போல் ஆபீஸ்காருடன் டிரைவர் பாலகுரு காத்திருந்தார்.
காரில் ஏறி உட்கார்ந்தார். பாலகுருவிடம் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. கையிலிருந்த அன்றைய நியூஸ்பேப்பரை பிரித்து முகத்தை மூடிக்கொண்டார். இன்று வீட்டில் அர்ச்சனை அமோகம் என்பது பாலகுருவுக்கு புரிந்தது. இன்று இந்த அர்ச்சனை ஆபீசில் புயலாக வீசப்போகிறது என்பதும் தெரிந்தது.
பாலகுரு மதுரைக்காரர். நல்ல மனுஷன். எல்லோருக்கும் ஓடிஓடி உதவுவார். இல்லை என்று சொல்லமாட்டார். முடியாது என்றும் சொல்லமாட்டார். பா.ஜோ கூட பாலகுருவிடம் மரியாதை காட்டுவார். பா.ஜோவைவிட வயதில் பெரியவர்.
சென்னை பீச்ரோடில் லைட்ஹவுஸ் தாண்டி காந்தி, கண்ணகி, உழைப்பாளர் சிலைகள் தாண்டி இடதுகைப்பக்கம் திரும்பி இரண்டாவது கட்டிடத்தின் வாசலில் காரை நிறுத்தி, பாஜோ இறங்க தோதாக காரின் கதவைத் திறந்து பிடித்தபடி பவ்யமாக நின்றார் பாலகுரு.
காரிலிருந்து
இறங்கினார் நடந்தார். ராஜா காலத்து அரண்மனை மாதிரி இருந்த பழங்காலத்து
பில்டிங்கில் இருந்தது அந்த ஆபீஸ். நவாப்பு காலத்தில் சிமென்ட் இல்லாமல்
செங்கல் தெரியும்படி கட்டியது. இரண்டே இரண்டு தளம்தான். ஆனால் கடல் மாதிரி
விசாலமானது. அதில் எட்டுபத்து அரசு ஆபீஸ்களை அங்கு வளைத்து
போட்டிருந்தார்கள். இன்னும்கூட ஐந்தாறு ஆபீஸ்களை அதில் மடக்கிப் போடலாம்.
அதில் ஒன்றுதான் பா.ஜோ வேலை பார்ப்பது. 28 படிக்கட்டுகள் ஏறிச்செல்ல
வேண்டும். லிஃப்ட் எதுவும் கிடையாது. இரண்டாவது மாடியில் இருந்தது ஆபீஸ்.
தினமும் இதில் ஏறி இறங்கினால் டயபெட்டஸ் வராது. ஹார்ட் அட்டாக்கும் வராது.
ஆபீஸின் மெயின் ஹாலையும் கடந்து, இருபுறமும் எழுந்து நின்ற வணக்கம் செய்த ஊழியர்களையும் அலட்சியம் செய்தபடி பா.ஜோ தனது ஏசி அறைக்குள் நுழைந்தார். பெரிய ஆபீசர் என்றால் இப்படித்தான் போகவேண்டும்.
இன்னும் சிறிது நேரத்தில் ஏதாவது ஒரு டேபிளில் இண்டர்காம் அலறும். அவர் பா.ஜோ அறைக்கு செல்வார். அவர் தலை உருளும்.
இன்று இவர் நல்ல மூடில் இருக்காரா…..? இல்லையா…? என்பதை அவர் நடக்கும் நடையைவைத்து கண்டுபிடித்து விடுவார்கள். 'இன்றைக்கு அவர் நடை சரியில்லை" என்றார்கள். அளவுக்குமீறி அமைதி காத்தார். அதுவும் அபாயகரமான அறிகுறி என்றார்கள்.
இன்றைக்கு அவரிடம் அகப்படும் அபாக்கியவான் யார் என்ற சிந்தனையில் ஆபீஸே மயான அமைதி காத்தது.
மார்க்கெட்டிங் மேனேஜர் மாரியப்பன் டேபிளில் இண்டர்காம் அலற, 'அப்பனே ஆதிமூலா என்னைக் காப்பாத்துப்பா…!" என்றபடி நாற்காலியை விட்டு எழுந்தார். அவரை மேனேஜர் மாரியப்பன் என்பதைவிட சாமியார் என்றால்தான் தெரியும்.
சுழல் நாற்காலியில் பாஜோ அப்படியும் இப்படியுமாக அரைவட்டத்தில் அசைந்துக் கொண்டிருக்க எதிரில் ரொம்ப நேரமாய் நின்றிருந்தார். காலியாய் இருந்த நாற்காலியில் உட்காரச்சொன்னது முட்டிவலி. பெரிய அதிகாரி சொல்லாமல் உட்காரக் கூடாது. கால் மாற்றி மாற்றி நின்று சமாளித்தார். சாமியாருக்கு ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது.
'ஐ வாண்ட் திங்ஸ் டன்…. ஐ டோண்ட் வாண்ட் டெட்வெயிட்ஸ் …இன் மை ஆபிஸ் ….”
'சார்… வந்து…"
'ஐ டோண்ட் வாண்ட் எனி மோர் ப்ளடி எக்ஸ்பிளனேஷன்ஸ்…”
அதற்குப்பிறகு அவர்பேசியவற்றை அனைத்தையும் எழுதினால் இந்த சிறுகதை நெடுங்கதை ஆகிவிடும். அதை எழுதவும் முடியாது.
அரைமணி நேரத்தக்குப் பிறகு கரும்புஆலையில் சாறுபிழிந்த பிறகு சக்கையை துப்புவது போல மாரியப்பனை வெளியே துப்பினார் பா.ஜோ.
அவர் நெற்றியில் எப்போதுமிருக்கும் எவர்கிரீன் விபூதிப் பட்டை வியர்வையில் கரைந்து காதோரமாய் வழிந்தது.
எல்லோரும் அவருக்காக ரகசியமாய் அனுதாபப் பட்டார்கள்.
சாமியார் தனது நாற்காலியில்; தொப்பென்று விழுந்தார். ஃபேன் வேகத்தைக் கூட்டினார். சட்டை பட்டன்களைக் கழட்டி விட்டுக் கொண்டார்.
மணியடித்து பியூனை வரவழைத்தார். மெதுவாகச் சொன்னார், 'ஒரு “ஜக்" ஐஸ் வாட்டர்".
வந்த ஒரு ஜக்கையும் முழுசாய் குடித்தார். படபடப்பு நீங்க ஒரு பீப்பி மாத்திரையை விழுங்கினார். சாமியாருக்கு ரெட்டை நாடி சரீரம். இரண்டு எட்டு எடுத்து வைத்தால்கூட சீத்துபூத்தென்று இறைக்கும்.
படபடப்பு கொஞ்சம் அடங்கியது. இண்டர்காமை எடுத்தார். ' மிஸ்டர் கணேசன் கொஞ்சம் வறீங்களா ?. அவர் அசிஸ்டெண்ட் மார்க்கெட்டிங் மேனேஜர்.
இவருக்கு
கீழே வேலை பார்ப்பவர். அவர் ஒழுங்காய் வேலை பார்த்திருந்தால் பாஜோ இவரை
கட்டிஏறி இருக்கமாட்டார். 'அவனை என்ன செய்கிறேன் பார்..." என்று கருவியபடி
இண்டர்காமை வைத்தார்.
பாஜோ வுக்கு கீழே சாமியார்; வேலைபார்ப்பது மாதிரி, மாரியப்பனுக்குக் கீழே கணேசன்.
அடுத்தசில நிமிடங்களில் கணேசன், மாரியப்பன் எதிரில் உட்கார்ந்திருந்தார்.
'சார் உங்கள் நாற்காலிக்கு அடியில் ஒரு வெடிகுண்டு இன்னும் அஞ்சி நிமிஷத்திற்குள்ள வெடிக்கப் போகுது.” என்று யாராவது வந்து சொன்னால்கூட 'ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுத்திட்டுப் போங்க… வெடிச்சபிறகு என்னை வந்து பாருங்க..." என்று சாவாதானமாகச் சொல்லக்கூடியவர் சாமியார். அப்படிப்பட்ட சாமியாரே தடுமாறினார்;. சாது மிரண்டுவிட்டது.
'ஐ வாண்ட் திங்ஸ் டன். .. ஐ டோண்ட் வாண்ட் டெட் வெயிட்ஸ்…. இன் மை ஆபிஸ்….”
'சார் … வந்து…."
'ஐ டோண்ட் வாண்ட் எனி மோர் ப்ளடி எக்ஸ்ப்ளனேஷன்ஸ்…”
'சார் … வந்து…"
'நான் சென்ஸ்….கெட் அவுட்…"
'ஐ வாண்ட் ரிசல்ட்ஸ்….”
வெயிலில் பீடுங்கிப்போட்ட கீரைத்தண்டாய் வாடிவதங்கி வெளியே வந்தார் கணேசன் . இது ஒன்றும் புதிதில்லை. அடிக்கடி அரங்கேறும் காட்சிதான்.
இன்றைக்கு மாலை ஐந்து மணிக்குள்ளாக அந்த பைல் சாமியார் டேபிளுக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் கணேசன் சாமியாராக செல்ல வேண்டியிருக்கும்.
கணேசன் அவசரமாக சில காரியங்கள் வெளியில் முடிக்க வேண்டியிருந்தது. டிரைவர் பாலனை கூப்பிட ஆள் அனுப்பினார். அவன் எங்கிருப்பான் என்று கணேசனுக்கு தெரியும்.
ஆபீசுக்கு வெளியே மரத்தடியில் பீடி குடித்துக் கொண்டிருந்த பாலன் கணேசன் கூப்பிடுகிறார் என்றதும் பீடியை காலுக்கடியில் போட்டு நசுக்கி திரும்பி எதிர்த்திசையில் மீதிப்புகையை ஊதி வாயை சுத்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டான்.
கணேசன்சார் அறைக்குள் நுழைந்து வணக்கம் வைத்தான், பாலன்.
'வண்டி ரெடியா…?" என்றார் கணேசன்.
'ரெடி சார் … ஆனா…"
'என்னைய்யா…? ஆனா …?"
'ஸ்டெப்னி இல்ல சார்… "
'என் …? எங்க போச்சுது…. ?"
'பஞ்சர் ஒட்றதுக்குப் போயிருக்குதுங்க…”
'என்னய்யா இது … ? பஞ்சர்ஒட்டப் போயிருக்குது… பொடலங்கா ஒட்டப் போயிருக்குதுன்னு சொல்லிக்கிட்டு …”
'சார் … வந்து …"
'ஐ ; வாண்ட் திங்ஸ் டன். … ஐ டோண்ட் வாண்ட் டெட் வெயிட்ஸ் இன் மை ஆபிஸ்…"
'சார் வந்து…"
'ஐ டோண்ட் வாண்ட எனிமோர் ப்ளடி எக்ஸ்ப்ளனேஷன்ஸ்…”
'சார் … வந்து …”
'நான்சென்ஸ்…. ஐ வாண்ட் ரிசல்ட்ஸ்…"
அதற்குப்பிறகு சாமியார் திட்டியதை எல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்தார். அவருக்கே வாய் வலிக்கும்வரை அவனை மரியாதைக் குறைவாக திட்டினார்.
'இனிமே ஒனக்கு மரியாதை இல்லை.. நீ மரியாதை குடுத்தாதான் நான் மரியாதை குடுப்பேன்.. ஜாக்கிரதை" இப்படி கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் தொண்டைகுழியைவிட்டு வெளியே வர மறுத்தது.
பாலன் வாயைத் திறக்காமல் தலையை குனிந்தபடி பேசாமல் நின்றான். அவரே ஓய்ந்துபோனதும் 'கெட் அவுட்" என்றார்.
அன்று சுமார் நாலரை மணிக்கு டிரைவர் பாலனுக்கு தற்காலிக வேலை நீக்கம் உத்தரவு வழங்கப்பட்டது.
அன்று இரவு அவன் மனைவி அஞ்சலை கேட்டாள் “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு… நல்ல மனுஷாளுக்கு ஒரு சொல்லு….குடிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இப்படி வயிறுமுட்ட குடிச்சிட்டு வந்திருக்கியே பாவி….”
இப்படி அவள் கேட்டதுதான் பாக்கி, பாலன் எட்டி அவள் தலை மயிரைக் கொத்தாக பிடித்து இழுத்து ஓங்கிஅவள் கன்னத்தில் அறைந்தான். பிறகு முகம் மார்பு முதுகு என்று பார்க்காமல் மூர்க்கமாக அடித்தான்.
“ரெண்டு போடுடி அப்பொதான் அவன் போதை தெளியும். அடி உதவுறமாதிரி அண்ணன்தம்பி உதவமாட்டான் ” என்று மகனை உதைக்க தன் மறுமகளுக்கு சொல்லிக் கொடுத்தாள், பாலனின் அம்மா.
“வேணாம் வேணாம் சொன்னா கேளு. அப்புறம் மரியாதை கெட்டுடும்” என்று சொல்லிக்கொண்டே அவன் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினாள் அஞ்சலை. ஆவேசம் வந்தவளாக அவனை மொத்மொத்தென மொத்தினாள்.
அஞ்சலையின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கீழே சாய்ந்தான பாலன்;. அவனை அங்கேயே விட்டுவிட்டு அவள் வீட்டுக்குள் போனாள்.
பாலன் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தான். ஆபீசில் இருந்த அத்தனை ஆபீசரையும் வண்டைவண்டையாகப் பேசினான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல 'அஞ்சலை உன்னை இல்லன்னா வேற யாரடி நான் அடிப்பேன் ?” என்ற வார்த்தையை திரும்பத்திரும்ப சொல்லிக்கோண்டே வெகுநேரம் வரை அழுதுகொண்டிருந்தான்.
பாலன் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தான். ஆபீசில் இருந்த அத்தனை ஆபீசரையும் வண்டைவண்டையாகப் பேசினான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல 'அஞ்சலை உன்னை இல்லன்னா வேற யாரடி நான் அடிப்பேன் ?” என்ற வார்த்தையை திரும்பத்திரும்ப சொல்லிக்கோண்டே வெகுநேரம் வரை அழுதுகொண்டிருந்தான்.
அஞ்சலை அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போனாள். “உன் கோபத்தை எதுக்குய்யா எங்கிட்ட காட்டறே” என்று சொல்லியபடி அவனுக்கு சோறு ஊட்டிவிட்டாள். அவன் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டான்.
அஞ்சலை சொன்னதை அவன் போதையிலும் யோசித்துக்கொண்டிருந்தான்.
Image courtesy: clipart.com |
No comments:
Post a Comment