ஆபத்தான மலைப்பகுதியில் ஒரு நாள்
ONE DAY IN NEW HAMPSHIRE WHITE MOUNTAINS
நியூ ஹெம்ப்ஷயர் மாநிலத்தில்
ஆபத்தான மலைப்பகுதியில் ஒரு நாள்
ஒயிட் மவுண்டைன்ஸ்
மவுன்ட் வாஷிங்டன்
WHITE MOUNTAINS ALBUM
(MOUNT WASHINGTON)
USA
2012 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒயிட் மவுண்டெய்ன் நேஷனல்
ஃபாரஸ்ட்' (WHITE MOUNTAIN NATIONAL FOREST) க்கு நான் சென்றிருந்தேன்.
1918 ம் ஆண்டு மே 16 ம் நாள், அமெரிக்க வனத்துறையால் ஒயிட் மவுண்டெய்ன்
நேஷனல் ஃபாரஸ்ட் தொடங்கப்பட்டது.
நியூ ஹேம்ப்ஷயர் (NEW HAMPSHIRE) என்னும் மாநிலத்தில் 94.35 % ம் மெயின் (MAINE) என்ற மாநிலத்தில் 5.65 % ம் ஆக இந்த தேசிய வனம் இரண்டு மாநிலங்களில், பரவியுள்ளது.
கிராஃப்டன், கூஸ், கரோல், ஆக்ஸ்பர்ட் ஆகிய கவுண்ட்டிகளில் (பகுதிகள்)
இந்த வனப்பரப்பு அமைந்துள்ளது.
இதில் உள்ள குன்றுகள் அனைத்தும் 4000 அடி உயரத்திற்கு
மேற்பட்டவை.
ஒயிட் மவுண்டைன்
மாதிரி நேஷனல் ஃபாரஸ்ட்' என்னும் தேசிய வனங்களில், இரண்டு காரியங்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஒன்று சுற்றுலா, இரண்டு அறிவியல் சார்ந்த ஆய்வுகள் (RECREATIONAL & SCIENTIFIC PURPOSES).
இது தவிர, மிகக் குறைவான அளவு வியாபாரத்திற்கும் (COMMERCIAL) பயன்படுத்துகிறார்கள்
சுற்றுலாவுக்கு அவர்கள் முக்கியத்துவம் தந்தாலும் மரங்களை, வனங்களை பாதுகாப்பதில், பராமரிப்பதில் ஆய்வு செய்வதில், அவர்கள் சோடை போகவில்லை.
தேசிய வனங்கள், கொழுத்த பணத்தை சுற்றுலா மூலம் அரசுக்கு
சமபாதித்துக் கொடுக்கிறது.
இன்னொன்று, அமெரிக்கர்கள் 100 க்கு 99.99 % சுற்றுலா
பிரியர்கள்.
அந்த 0.01 %, யார் என்றால், நடக்கப் பிடிக்க முடியாதவர்களாக
இருக்கும்.
'வீக் எண்ட்' வந்தால் போதும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு
குழந்தைக் குட்டிகளொடு குறைந்தபட்சம் 100 கி.மீ. தாண்டிப் போய் விடுகிறார்கள்.
சனி ஞாயிறு இரண்டு நாள், ஓவர் டைம், வீடு ஒட்டடை அடிக்க,
வெள்ளை அடிக்க, துணி துவைக்க, ஒன்றும்
பேசக்கூடாது.
அமெரிக்காவின் தேசிய வனங்கள் எல்லாம் அரசுக்கு காசு பணம் கறக்கும்
காமதேனுக்கள்.
அரசு அந்த வனங்களை, மரங்களை பாதுகாப்பதில்,
பரமரிப்பதில், மேம்படுத்துவதில் செலவு செய்ய கஞ்சத்தனம் காட்டுவதில்லை.
வனப்பகுதிக்குள் சாலை அமைத்தால் வனங்கள் அழிந்துவிடும் என்ற
கருத்து பாமரத்தனமானது என்று சொல்லுகிறார்கள், அங்கு உள்ள வனப் பாதுகாவலர்கள்.
"ரோடு இருந்தாதான் வனங்களையே பாதுகாக்க முடியும்.
வனங்களில் நாங்கள் என்ன செய்யறோம்'னு இங்க "ப்ப்ளிக்" பார்க்கறாங்க. வனங்களை
நாங்கள் பாதுகாக்கிறோம் எங்களை வனங்கள் பாதுகாக்குது' என்று உணர்ச்சி வசப்பட்டார்,
அந்த அமெரிக்கர்.
ஒவ்வொரு வனப்பகுதியிலும் திட்டமிட்டு அரசு வியாபாரத்திற்கான
மரங்களை (COMMERCIAL INDUSTRIES) உற்பத்தி செய்கிறது.
நடந்து சென்று பார்ப்பதற்கான நடை பாதைகள், குதிரைகளில்
சென்று பார்ப்பதற்கான குதிரைத் தடங்கள், கார் பயணத்திற்கான 'பக்கா' ரோடுகள்,
சுற்றுலாவினர் வந்து தங்க டெண்ட் வசதி, எல்லாம் அரசு செய்து தருகிறது. ஆனால் ஒரே
ஒரு 'சுள்ளி' யைக்கூட அவர்கள் தொட முடியாது. அங்கு செல்ல ரயில் வசதி உள்ளது.
இந்த தேசிய வனம், அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் ஏழு லட்சத்து 50 ஆயிரத்து 852 ஏக்கர் பரப்பளவில் "டேரா" போட்டுள்ளது.
ஒயிட் மவுண்டெய்ன் அடிவாரத்திலிருந்து 6288 அடி உயரத்தில்
அமைந்துள்ள அதன் உச்சிக்கு செல்ல உயிரைப்பயணம் வைத்து கார் சவாரி செய்ய வேண்டும்.
"பயந்தாங்கொள்ளிகள் திறமையான ஓட்டுனர்களை கூடிச்
செல்லுங்கள் என்று, மலை அடிவாரத்தில் வைத்திருக்கும் எச்சரிக்கை பலகை நம்
வயிற்றைக் கலக்குகிறது.
'நான் என் சொந்த ரிஸ்க்'கில் தான் மேலே செல்கிறேன் என்று
எழுதி கையெழுத்துவேறு வாங்கி பீதியை கிளப்புகிறார்கள்.
திறமையான ஓட்டுநர்கள் மட்டுமே ஒயிட் மவுண்டைன் மலைச்
சாலையில் ஓட்டிச் செல்ல முடியும் என்பது உண்மைதான்.
இந்த தகவல்களையெல்லாம் என் மகன் சொல்லிக் கொண்டே வந்தான்.
நான் என் மனைவி, மகன், மறுமகளுடன் காரில் சென்றோம்.
என் மகன்தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.
சாதரணமான சாலைகளைவிட இந்த மாதிரி இடங்களில் ஒட்ட அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
சாதரணமான சாலைகளைவிட இந்த மாதிரி இடங்களில் ஒட்ட அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
'ரிஸ்க்; என்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி எனக்கு' இது அவன்
அடிக்கடி சொல்லும் டயலாக்.
ஒயிட் மவுண்டைன் வனங்களின் ஊடாக கார் சவாரி செய்யும்போது சாலை நெடுக அழகு
கொட்டிக்கிடக்கிறது.
"ஆயிரம் கண் போதாது
வண்ணக்கிளியே" என்று எழுதிய கவிஞரை இங்கு விட்டிருந்தால், "ஆயிரம் கண் போதாது வனக்கிளியே"
என்று பாடியிருப்பார்.
சாலையின் இரண்டு பக்கமும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சாலை.
நாம் மேலே போகும் போது எதிராக இன்னொரு கார் எதிராக வந்துவிட்டால்
"அள்ளு விட்டுடும்"
ஒரு கார் மேலே போனால், கீழே இறங்கும் கார் மிக ஜாக்கிரதையாக
அதற்கு வழிவிட வேண்டும்.
மேலே செல்லும் காரும் ரொம்ப ஜாக்கிரதையாய் விலகிச் செல்ல
வேண்டும்.
இல்லை என்றால் இரண்டு கார்களில் இருப்பவர்களும் 'கோவிந்தா கோவிந்தா
'
இன்னொரு முக்கியமான சமாச்சாரம், இங்கு நிலவும் ஏடாகூடமான
தட்பவெப்ப நிலை.
திடீரென புயல் அடிக்கும், பனிப்புயல் அடிக்கும்.
எது எப்போது அடிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
1934 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ம் தேதி உலகத்திலேயே மிக
வேகமான புயல் அடித்து நொறுக்கியது இங்குதான்.
1932 முதல் 1939 வரை, இங்கு அடித்த வெய்யில், வீசிய காற்று,
பெய்த மழை, கொட்டிய பனி எல்லாவற்றையும் வானிலை
மையம் ஒன்று பதிவு செய்து வந்தது.
அதன் மூலம்தான் உலகப்பிரசித்தி பெற்ற புயல் காற்றின் வேகம் இங்கு
பதிவு செய்யப்பட்டது.
ஒன்றா ? இரண்டா ? மணிக்கு 231 கிலோமீட்டர் வேகத்தில்
அடித்தது.
ஒயிட் மவுண்டைன்
உச்சியில், தகவல் பலகை ஒன்றில் இதனை எழுதி
வைத்துள்ளார்கள்.
அதைப் படித்ததும் எங்களுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது.
காரணம் தகவல் பலகையைப் படிக்கும்போதே பளிச்சென்று இருந்த
வானம் குபீரென்று கும்மிருட்டாக மாறத் தொடங்கியது.
ஐஸ்கட்டி உரசிய மாதிரி காற்று வீசியது.
எங்கிருந்தோ கருப்பு நிற மேகங்கள் குவியலாக வந்து எங்கள்
மீது அப்பிக்கொண்டது.
அடுத்த வினாடி ஓட்டகதியில் எங்களை அறியாமலே எங்கள் கால்கள்,
காரை நோக்கி நடக்க ஆரம்பித்தன.
இருட்டு அடர்த்தி ஆவதற்கு முன்னால் கீழே இறங்கி விட வேண்டும்.
அவசரத்தில் கார்களும் இரு சக்கர வாகனங்களும் ஒன்றைஒன்று முந்திக்கொண்டு
சென்றன.
பொதுவாக, ஒயிட் மவுண்டெய்ன்' ல், ஒரு ஆண்டில் ஆறு மாதம் சுற்றுலா என்று "மூச்"
விடக்கூடாது.
காலை மாலை என்ற வித்தியாசம் இன்றி உறை பனி, சாலைக்கு 'சாக்ஸ்'
போட்டமாதிரி உறைந்து கிடக்கும்.
6288 அடி உயரத்திலிருந்து மெல்ல நாங்களும் இறங்கிக் கொண்டிருந்தோம்.
மலையிலிருந்து இறங்கியதும், மலையடிவாரத்தில்" எங்கள்
காருக்கு "பட்டயம்" ஒன்று கொடுத்தார்கள்.
பட்டயம் என்றால் வேறு ஒன்றுமில்லை, ஒரு ஸ்டிக்கர்.
அதனை காரில் முன்னால் அல்லது பின்னால் ஒட்டிக்கொள்ளலாம்.
அதில், "இந்த
கார் ஒயிட் மவுண்டைன் போய்விட்டு வெற்றிகரமாக திரும்பிவந்த கார்" என்று எழுதியுள்ளது.
No comments:
Post a Comment