தள்ளிவிடுங்க
தண்ணியில
தானா கத்துக்குவான் -
2
(நான் படித்த பள்ளிக்கூடம் வானொலி - தொடர்)
HOW I LEARNED RADIO BROADCASTING
நான்
படித்த பள்ளிக்கூடம் வனொலி என்று சொன்னேன்.
பாடம் சொல்லித்தந்த வாத்தியார்கள் பற்றியும் சொல்ல வேண்டும்.
துறைவன், திருவேங்கடம், மகாதேவன், நடராஜன், செய்யாறு ஆடலரசன் என்ற
தாண்டவராயன், ஆகிய ஐவரிடமும் நான் படித்தது நிறைய.
வானொலி நிகழ்ச்சி தயாரிப்பில் இந்த ஐவரைப் பற்றியும் தனித் தனியாக ஒரு
புத்தகம் கூட என்னால் எழுத முடியும்.
இவர்களைப்பற்றி எழுதாமல், வானொலி பற்றியும் என் நிகழ்ச்சிகள் பற்றியும்
என்னால் எழுத முடியாது.
"தலையில குட்டு வைக்கறதவிட முதுகுல தட்டிக் குடுக்கறது
மேல்" என்று நம்பும் ஆசிரியர், துறைவன். அவர்தான் நிலய இயக்குநர், நான்
வானொலியில் சேர்ந்தபோது 1978 ம் ஆண்டில்.
தமிழில் பெயர் சொல்லும் எழுத்தாளராக இருந்தவர்.
"தள்ளிவிடுங்க தண்ணியில தானா கத்துக்குவான் நீச்சல்" இது
தாண்டவராயன். வீடும் வயலும் ஒலிபரப்புப் பிரிவில் எனக்கு நேரடி பாஸ்.
பண்ணை இல்ல ஒலிபரப்பின் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
"நீ ஐம்பது ரன் எடுத்திருக்கெ. அது பெரிய சமாச்சாரம். ஆன உன்னால
100 ரன்னும் எடுக்க முடியும், அதுக்கு மேலயும் எடுக்க முடியும்" இது மகாதேவன்
சார்.
நான் தயாரித்த முதல் நிகழ்ச்சியை பாராட்டியவர். சென்னை வானொலியில் நிகழ்ச்சி நிர்வாகியாக இருந்தவர்.
பின்னாளில் 'பிரிட்டிஷ்
பிராட்காஷ்ட்டிங் கார்ப்பொரேஷன்' (பி பி சி) க்கு சென்று பணியாற்றியவர்.
ஏ.நடராஜன், அவரே ஒரு புத்தகம், அவரை நான் நிறைய படித்திருக்கிறேன்.
ஒரு முழுமையான ஒலிபரப்பாளராக எனக்கு அவர்
தெரிவார். இலக்கியம், சினிமா நிகழ்ச்சிகளில் எனக்கு இருந்த பரிச்சயத்தை
மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தவர்.
தொலைக்காட்சி இயக்குநராக பணி செய்தவர். டெப்யூடி டைரக்டர் ஜெனரலாகவும் பணி செய்தவர்.
சிலரைப் பார்த்ததும் பிடிக்கும், சிலரைப் பார்த்ததும் பிடிக்காது. இதற்கு
விஞ்ஞான ரீதியாக காரணம் சொல்ல முடியாது.
அப்படி பிடித்துப் போனவர் திருவேங்கடம். அவருக்கு நான் ரகசியமாய்
வைத்திருக்கும் பெயர் மிஸ்டர் கிளீன்.
அவருக்கு பிடித்தமானவை 3 வார்த்தைகள். தமிழ், ஒழுங்கு, உபயோகம்.
நிகழ்ச்சிகளில் கூட அவை வேண்டும் என அடம் பிடிப்பார்.
ஆனால் அவரிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய எளிமை. தமிழும் ஆங்கிலமும்
சமமாக சரளமாக பேசும் லாவகம்.
மதுரை வானொலியில் நான் வேலை பார்த்தபோது நிலையத்தின் இயக்குநர். சென்னையிலும் இயக்குநராகவும் டெப்யூடி டைரக்டர் ஜெனரலாக பணி செய்தவர்.
இப்படியாக இவர்களுடைய வழிகாட்டுதலில் வானொலியில் சென்னையில் 9 ஆண்டுகளும்
மதுரையில் 7 ஆண்டுகளுமாக நான் விவசாய நிகழ்ச்சிப் பிரிவில் ஒலிபரப்புக்கலையை கற்றுக்கொண்டது 16 ஆண்டுகள்.
(தொடரும்)
No comments:
Post a Comment