Saturday, December 27, 2014

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் - GREAT SMOKY MOUNTAIN NATIONAL PARK




கொஞ்சிக்  கொஞ்சிப்  பேசும்
கிரேட் ஸ்மோக்கி மவுண்டைன் தேசியப் பூங்கா  

GREAT SMOKY MOUNTAIN NATIONAL PARK

டென்னிஸி மற்றும் நார்த் கரோலினாவின் 
கிரேட் ஸ்மோக்கி மவுண்டைன்
தேசிய பூங்கா   





GREAT SMOKY MOUNTAIN
NATIONAL PARK



(TENNESSEE & NORTH CAROLINA, USA)

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானத்தில் ஒட்டடை அடிக்கும் மரங்கள்,  வண்ணங்களை வரிசைப்படுத்தும் வகை வகையான பூக்கள் ! செடிகள், ! கொடிகள் ! பெயர் தெரியாத பறவைகள், பின்புல இசை மீட்டும் சிள் வண்டுகள்குழந்தைகள் போல சலசலத்து ஓடும் ஓடைகள், சிறுசும் பெருசுமான மலைக்குன்றுகள், கருப்பும் வெளுப்புமாக, மலைப்பகுதி முழுக்க சுற்றித் திரியும் மேகங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக விரிந்து பரந்திருக்கும் மரங்களின் சாம்ராச்சியம் து.


அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இயற்கையின் சொர்க்கம் "ஸ்மோக்கி மவுண்டெய்ன் நேஷனல் பார்க்" ன் 6000 அடி உயரத்தில், "கிளிங்மேன்ஸ் டோம்" என்ற சிகரத்தில்  ஐஸ் மேகங்களை ஒதுக்கியபடி   நான் நடந்து கொண்டிருந்தேன்.

அது 2012 ன் ஜூன் மாதம் 27 ம் தேதி

அமெரிக்காவில் மென்பொருள் எஞ்சினியர்களாக வேலை பார்க்;கும் என் மகன் ராஜா. மறுமகள் மவுஸ்மி, அவர்களுடன் பணியாற்றும் என் மகனின் நண்பர் சித்து, மறுமகளின் தோழி டிர்க்கி - இவர்கள்தான், என்னையும் என் மனைவி கல்யாணியையும்  எங்களை அழைத்துச் சென்றார்கள்.

அவர்கள் இல்லை என்றல் ஜென்மத்தில் இந்த இடங்களில் எல்லாம் எங்களால் கால் வைத்திருக்க முடியாது.

"அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்கும்"  என்று சொல்லி சொல்லி  இந்த இடங்களை தெரிவு செய்து வைத்திருந்தான், என் மகன்.


கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானத்தில் ஒட்டடை அடிக்கும் மரங்கள்,  வண்ணங்களை வரிசைப்படுத்தும் வகை வகையான பூக்கள் ! செடிகள், ! கொடிகள் ! பெயர் தெரியாத பறவைகள், பின்புல இசை மீட்டும் சிள் வண்டுகள். குழந்தைகள் போல சலசலத்து ஓடும் ஓடைகள், சிறுசும் பெருசுமான மலைக்குன்றுகள், கருப்பும் வெளுப்புமாக, மலைப்பகுதி முழுக்க சுற்றித் திரியும் மேகங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக விரிந்து பரந்திருக்கும் மரங்களின் சாம்ராச்சியம் து.

.
1934 ல் திட்டமிடப்பட்ட இந்த "கிரேட் ஸ்மோக்கி மவுண்டெய்ன் நேஷனல் பார்க்" ஐ 1940 ம் ஆண்டு, முறையாக தொடங்கி வைத்தவர், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி எஃப் டி ரூஸ்வெல்ட்.

அமெரிக்காவின் மிகப்பிரபலமானது அப்லாச்சியன்  மலைத்தொடர் (APPALACHIAN MOUNTAIN CHAINS). இந்த மலைத்   தொடரில் "புளூ ரிட்ஜ் மவுண்டெய்ன்" (BLUE RIDGE MOUNTAINS) ன் ஒரு பகுதிதான் "கிரேட் ஸ்மோக்கி மவுண்டெய்ன் நேஷனல் பார்க்",


டென்னிசி மற்றும் நார்த் கரோலினா மாநிலங்களின் எல்லைகளையும் தொட்டுக்கொண்டுள்ளது  இந்த தேசிய பூங்கா,  இதன் மொத்தப் பரப்பு 522419 ஏக்கர்.

அமெரிக்காவிலேயே மிக அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்திழ்ப்பது இந்த பூங்காதான்.


டென்னிசி'யின் கட்லின்பர்க் (GATLINBURG), நார்த் கரோலினா' வின் செரோக்கி (CHEROKEE)' ஆகிய நகரங்கள்  இந்த தேசிய பூங்காவின் நுழைவு வாயில்கள்.

தெருக்கூத்து, கதக்களி, மற்றும் யட்சகானம் ஆகிய நாட்டுப்புற கலைகளின்  ஒப்பனை மாதிரி கட்லின்பர்க்' ம், செரோக்கி'யும் எப்போதும் கூடுதலான ஒப்பனையுடன்  மின்னும் நகரங்கள்.

கட்லின்பர்க் வழியாகத்தான் நாங்கள் "ஸ்மோக்கி" யில் நுழைந்தோம்.

கழுத்து சுளுக்கும் அளவுக்கு தலையை உயர்த்தினால்தான் இங்கிருக்கும் மரங்களின் உச்சியைப் பார்க்கலாம். 

எப்படிப் பார்த்தாலும் அவற்றின் வயது 100 ஆண்டுகளைத் தாண்டும் என்பது என் கணிப்பு.

அதன் பிறகுதான் தெரிந்து கொண்டேன், இயற்கையாய் இருந்த அடர்த்தியான காடுகளை மொட்டைத் தலையாக, மழித்து ஒழித்தது, இடைக்காலத்தில் இங்கு வந்து குடியேறிய ஐரோப்பியத் துரைமார்கள் என்று.

அவர்கள் ஏப்பம் விட்டது போக மிச்ச சொச்சமா மரங்கள்தான் அவை, தோராயமாக அவற்றின் வயது, 150 முதல் 200 க்கும் மேல் இருக்கும்.

அதன் பிறகு இந்த காடுகளுக்கு மறு வாழ்வு தந்தது ரூஸ்வெல்ட்டின்  அரசு.
அந்த சமயம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர், ஃபிராங்க்ளின் டெலானோ  ரூஸ்வெல்ட்.

அரசின் எண்ணத்திற்கு உதவியாக ஜூனியர் ராக்பெல்லர் (JOHN D.ROCKFELLER,JR.) 5 மில்லியன் டாலரும், அன்றைய அமெரிக்க அரசின்  2 மில்லியன் டாலரும் சேர்ந்துதான் இந்த பூங்காவுக்கு பிள்ளயார் சுழி  போட்டது. 
 
இது தவிர டென்னிசி மற்றும் நார்த் கரோலினா மக்களும், இந்த தேசிய பூங்காவை உருவாக்க குருவி சேர்ப்பது மாதிரி நிலங்களை சிறுக சிறுக சேர்த்து  உதவினர்.

ஐந்து லட்சம் ஏக்கரில்  பரந்திருக்கும் இந்த பூங்காவின் மரங்களின் வேர்களில் காதை வைத்துக் கேட்டால் அவை, "சி சி சி" (CCC) என்னும் ஒரு சரித்திரத்தை முணுமுணுக்கும்.

அது என்ன "சி சி சி" சரித்திரம் ?

சி சி சி என்றால் "சிவில் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVIL CONSERVATION CORPS)".

அன்றைய ஜனாதிபதி ஃபிரங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட் அமைத்த மரங்களின் ராணுவம்தான் (TREE SOLDIERS)  "சிவில் கன்சர்வேஷன் கார்ப்ஸ்".

1930 களில் "கிரேட் டிப்பரஷன் (GREAT DEPRESSION)" என்னும் பஞ்சம் அமெரிக்காவை அடித்துத் துவைத்து  நார்நாராக்கியது.

வேலை இல்லாத் திண்டாட்டம்  அமெரிக்காவை ஓட ஓட விரட்டியது.

இக்கட்டான அந்த காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ரூஸ்வெல்ட், அடிப்படையில் ஒரு விவசாயி.

நிலவளம், நீர்வளம் வனவளம், இவற்றை மேம்படுத்தாமல்  ஒரு நாட்டின் உற்பத்திக்கான ஆதாரங்களை மேம்படுத்த முடியாது என்று நம்பினார்.

இயற்கை வளங்களை மேம்படுத்துவது மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினையும் உருவாக்கினார்.

இளைஞர்களின் பிரம்மாண்டமான சக்தியை முதலீடாக்கி இயற்கை வளங்களை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தினார்.

அதனை செய்து முடிப்பதற்காக அவர் உருவாக்கிய இளைஞர்களின்  ராணுவம்தான் சி சி சி.

ரூஸ்வெல்ட்டின் மூளையிலும், "சி சி சி" யின் வியர்வையிலும் பிறந்தவைதான், அமெரிக்காவின், நூற்றுக்கணக்கான "ஸ்மோக்கி" போன்ற தேசிய பூங்காக்கள்.

அன்று உருவாக்கப்பட்ட இயற்கை வளங்கள் என்ற வேர்களின் மீதுதான் அமெரிக்கா தன் கிளைகளை பரப்பிக் கொண்டிருக்கிறது.

1930 களில், தரையோடு தரையாக இருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் உயர அடித்தளம் போட்டது, சி சி சி.

அமெரிக்காவின் ஹைவே எண்;441, நியூ ஃபவுண்ட் கேப் ரோட் (NEW FOUND GAP ROAD) வழியாக நாங்கள் காரில் ஸ்மோக்கியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.

இந்த ரோடும் "சி சி சி"  போட்ட கோடுதான்.

கொஞ்சிக் கொஞ்சி பேசியபடி சாலை ஓரமாகவே ஓடிவரும், இந்த ஆற்றின் குறுக்கே இருப்பதும் "சி சி சி" கட்டிய பாலம்தான்.


அங்கு இறங்கி கொஞ்சம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

கிளீங்மேன்'ஸ் டோம் (CLINGMANS DOME) உச்சியில் உல்லாசப் பயணிகளின் வசதிக்காக இருக்கும் கழிப்பறைகள் கூட "சி சி சி" கட்டியவைதான்.

துதான் "சி சி சி" யின் சரித்திர சுருக்கம்.

இந்த "ஸ்மோக்கி மவுண்டெய்ன் நேஷனல் பார்க்" ல் 100 வகை மரங்கள், 1400 வகை பூக்கும் தாவரங்கள், 5000 வகை பூவா தாவரங்கள், 200 இனப் பறவைகள், 63 இன பாலூட்டிகள், 50 வகை மீன்கள், 39 வகை ஊர்வன, 43 வகை நீர்வாழ்வனவும், விசித்திரமான நுரையீரல் இல்லா சலமேண்டர்களும் (SALAMANDER) அடங்கும்.

சலமேண்டர்கள் தோல் மற்றும் வாய்ப்புறத்தில் உள்ள திசுக்கள் மூலம் சுவாசிக்கக் கூடியவை.

இவை மேற்கத்திய நாடுகளில் அதிகம் காணப்படும் நீர்வாழ் பிராணி.

2010 ம் ஆண்டில் 9 மில்லியன் சுற்றுலா பயணிகளும் பொழுதுபோக்கு அல்லாத கரணங்களுக்காக  வந்தவர்கள் 11 மில்லியன் என்றும் சொல்லுகிறது, இந்த பூங்காவின் வெளியீடு ஒன்று.

ஓங்கி உயர்ந்த மலைக்குன்றுகளில், 1400 மி.மீ. ஆண்டு சராசரி மழையும், பள்ளத்தாக்குகளில் 2000 மி.மீ. மழையும், கிடைக்கிறது. இது அமெரிக்காவின் அதிகபட்ச மழை என்று சொல்லுகிறார்கள்.

இந்த தேசியப் பூங்காவின் கவர்ச்சிகரமான அம்சம் "கேட்ஸ் கோவ்" பள்ளத்தாக்கு (CADES COVE VALLEY).

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னதாக இங்கு வசித்த பூர்வீகக் குடிகளின் புராதனமான மரவீடுகள் (LOG CABINS), சர்ச்சுகள், தானியக் குதிர்கள் போன்றவை இன்னும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில்   ஒரு ஆச்சர்யமான விஷயம் நேஷனல் பார்க் என்று சொல்லப்படும் இந்த வனப்பூங்காக்கள் அரசுக்கு நிறைய பணம் சம்பாத்தித்துக் கொடுக்கின்றன.

"ஸ்மோக்கி மவுண்டெய்ன் நேஷனல் பார்க்" செல்லுபவர்கள், ஒரு சில மிருகங்களையாவது கண்டிப்பாக பார்க்க முடியும்.

இந்த பூங்காவுக்குப் போனால் கண்டிப்பாய் ஒரு கரடியையாவது சந்திக்காமல் வர முடியாது.

நான் கூட ஏதோ கரடி விடுகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.
நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்பது போல, கரடி ஒன்று வேடிக்கை பார்க்கும் எங்களை சட்டை செய்யாமல் மரங்களின் பின்னால் வாக்கிங் போய்க் கொண்டிருந்தது,

ரோட்டோரத்திலேயே பயம் இல்லாமல் மான் ஒன்று புல் மேய்ந்து கொண்டிருந்தது.


வெட்கப்பட்ட வான்கோழி ஒன்று எங்களைப் பார்த்துவிட்டு  மரங்களின் பின்னால் போய் ஒளிந்து கொண்டது,

நம்மூர் 'பாப்பார மைனா' மாதிரி ஆனால் சிவப்பு மார்புக்குருவி ஒன்று மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்தது. 


கேட்ஸ் கோவ் பள்ளத்தாக்கில் செரோக்கி பூர்வீகக் குடிகளின் 18 ம் நூற்றாண்டின் மர வீடுகள், சர்ச்சுகள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை கம்பளம் விரித்ததைப் பொன்ற மேய்ச்சல் புல்வெளிகள், ஆங்காங்கே போட்டியில்லாமல் மேயும் குதிரைக் கும்பல்.




குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக 'ரப்பர் டியூப்' போட்டு குதித்துக் குளித்து விளையாடத் தோதாக சாதுவாக சலசலத்து ஓடும் சாலை ஓரச் சிற்றாறு,  அத்தனையும்  என் கேமராவுக்குள் சிக்கிக்கொண்ட பொக்கிஷங்கள். 



  Written & photographed By Deva,Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam



INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...