Monday, August 11, 2014

தமிழ்நாட்டின் 26 ஆறுகள் ஓர் அறிமுகம் - TWENTY SIX RIVERS OF TAMILNADU










தமிழ்நாட்டின் 
26 ஆறுகள் 
ஓர் அறிமுகம் 



TWENTY SIX RIVERS OF TAMILNADU 

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918626195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com)


தமிழ்நாட்டில் ஆறுகள் பெரும்பாலும்
கிழக்குப் பக்கமாக ஓடி வங்க கடலில் சேர்கின்றன.
கேரள நாட்டின் ஆறுகள் அத்தனையும் மேற்குப்
புறமாக ஓடி அரபிக் கடலில் சேர்கின்றன.

இந்த ஆறுகள் அனைத்தும் வட இந்திய
ஆறுகளை விட வயது மூத்தவை .
ஆனால் ஆண்டு முழுவதும் நீர் வரத்து
உள்ள ஆறுகள் அல்ல. கனமழை
காலத்தில் மட்டும் கரை கொள்ளமல் ஓடும்.

பனிக்கட்டி உருகி பாய்ந்து வரும்
வட மாநில ஆறுகளின் நீரைக்காட்டிலும்
தமிழ்நாட்டு ஆறுகளின் ஊற்று நீர் தெளிவானவை.

மேலும் தமிழ்நாட்டின் கிழக்கு
முகமான சரிவு, ஆறுகளில் நீரோட்டத்தை
வேகப்படுத்துகின்றன.

எப்போதும் நீரோடும் ஆறுகள்[1],
எப்போதாவது நீரோடும் வறண்ட ஆறுகள்[2]
இடைக்காலம் விட்டு ஓடும் ஆறுகள்[3]
என மூன்று வகையாக நிலவியல்
வல்லுநர்கள் பிரிக்கின்றனர்.

எப்போதும் நீரோடும் ஆறுகள், இப்போது
தமிழ்நாட்டில் எதுவும் இல்லை.
பாலாறு, தென்பெண்ணை ஆகியவை
இடைக்காலம் விட்டு ஓடும் ஆறுகள்.
குண்டாறு, வைப்பாறு போன்றவை
எப்போதாவது நீரோடும் வறண்ட ஆறுகள்.

1.அடையாறு

சென்னை பெருநகரில் உற்பத்தி ஆகும் சாக்கடையின் ஒரு பகுதியை கூவம் ஆற்றுடன் பகிர்ந்து கொண்டு வங்காள விரிகுடா கடலுக்கு எடுத்துச் செல்லும் பெரும் பணியை செய்யும் இந்த ஆறு, செம்பரம்பாக்கத்தில் புறப்படுகிறது.

2.அமராவதி ஆறு

ஆன்பொருநை நதி என்று சங்க காலத்தில் அழைக்கபட்ட இந்த ஆறு காவிரியின் முக்கிய துணை ஆறு , சண்முகாநதி, குடகனாறு, உப்பாறு ஆகியவை இதன் உபநதிகள். கொழுமம் அருகே குதிரை ஆறு இதனுடன் சேர கரூர் நகரில் காவிரியுடன் சங்கமம் ஆகிறது.

3.அரசலாறு

தஞ்சாவூர் வரை செல்லும் காவிரி ஆறு அங்கு ஐந்து கிளை ஆறுகளாக பிரிகிறது. அவற்றில் முக்கியமான ஆறு அரசலாறு.

4.காவேரி ஆறு

கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவேர்யில் புறப்பட்டு தமிழ்நாட்டில் வங்கக்கடலில் சங்கமம் ஆகும் ஆறு. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் தாகம் தீர்க்கும் ஆறு. இது தமிழ்நாட்டின் கங்கை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்ந்து கீழைக் கடலில் கலக்கிறது. பவானி, அமராவதி ஆகியவை இதனுடன் சேரும் முக்கியமான துணை ஆறுகள்.

5. கெடிலம் ஆறு

திருக்கோவிலூரில் உற்பத்தியாகி மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றுடன் சேர்ந்து வங்கக்கடலில் ஐக்கியமாகிறது.

6. கல்லாறு

கிழக்கு தொடர்ச்சி மலையில் பச்சை மலைச்சாரலில் உற்பத்தி ஆகும் ஆறு.

7. குடமுருட்டி ஆறு

 திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ஓடும் காவிரியின் துணை ஆறு. திருவாரூரின் ஐந்து ஆறுகளில் ஒன்று.

8. கொள்ளிடம் ஆறு

காவிரியின் துணை ஆறுகளில் பிரபலமான ஒன்று. பரங்கிபேட்டைக்கு அருகில் கடலில் சங்கமிக்கிறது.

9. குண்டாறு

மேற்கு தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. குற்றாலத்திலும் ஒரு குண்டாறு உற்பத்தி ஆகிறது. இதற்கு அரிகா நதி என்ற பெயரும் உண்டு.

10. பாலாறு

காவேரிக்கு அடுத்தபடியாக  இந்தியாவில்   அதிகமாக பத்திரிகையில் அடிபடும்  ஆறு  பாலாறு. கர்நாடக மாநிலத்தில்  கோலார் மாவட்டத்தில்  நந்தி மலையில்  உற்பத்தியாகி  பருவ மழையின் கருணையால்  மிச்ச சொச்சமாய் கிடைக்கும்  நீரை  கர்நாடகாவுக்கும் கொடுக்க  முடியாமல்  தமிழ்நாட்டிற்கும் பதில் சொல்ல முடியாமல்  திண்டாடும்  ஆறுதான்   பாலாறு.

போதுமான நீர் கொடுக்க முடியாமல்  போனால் கூட 222  கி.மீ.  தொலைவு  தமிழ்நாட்டில் பயணம் செய்கிறது  பாலாறு. அத்துடன் கர்நாடக மாநிலத்தில் 93 கி.மீ. ம்   ஆந்திரப் பிரதேசத்தில் 33 கி.மீ. ம்  கடந்து   தமிழகத்தில்  கனகநாச்சியம்மன் கோவிலின்  அருகாமையில்  புல்லூர்  என்னும் கிராமத்தில்  நுழைகிறது.

வங்கக்  கடலில்  வயலூர்  என்னுமிடத்தில்  சங்கமமாகிறது.  இது  சென்னையிலிருந்து  100 கி .மீ.  தொலைவில் உள்ளது.

புல்லூர்,  ராமநாயக்கன்பேட்டை,  அம்பலூர்,  வாணியம்பாடி, காட்பாடி,  ஆற்காடு,  ராணிப்பேட்டை,  குடியாத்தம்,  வேலூர்,  வாலாஜாபேட்டை , காங்சிபுரம்,  செங்கல்பட்டு,  ஆகியவை பாலாற்றின் கரையோர  கிராமங்கள் மற்றும்  நகரங்கள்.

11. வெள்ளாறு

சேர்வராயன் மலை, கல்ராயன் மலை மற்றும் பச்சை மலையில் உற்பத்தியாகும் அருவிகள் ஒன்று சேர்ந்து வெள்ளாறாக உருவெடுத்து தற்போதைய கடலூர் மாவட்டத்தில் பாய்ந்து பரங்கிப்பேட்டைக்கு அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு வெள்ளாறு கிழ்க்கு முகமாக ஓடி கடலில் கலக்கிறது. இது தென் வெள்ளாறு.

12. வைகை ஆறு

மாதுரையின்  பிரபலமான ஆறு  வைகை.  இது வருசநாடு  மலைப்பகுதியிலிருந்து  உற்பத்தியாகிறது. பழனிமலை மற்றும்  வருசநாடு  மலைச் சரிவிற்கு  இடைப்பட்ட பகுதிதான்;  இதன் சரியான உற்பத்தி கேந்திரம்.
  
வட்டப் பாறை நீர்வீழ்ச்சி இந்த ஆற்றில்தான் உள்ளது. மதுரை வழியாக 258 கி.மீ. பயணப்படும்  வைகை ஆற்றின் நீர்வடிப்பரப்பு (DRAINAGE BASIN) 7031 கி.மீ.: இது இராமனாதபுரம் மாவட்டத்தில்  “பாக்ஸ்  ஸ்ட்ரைட்”  என்னுமிடத்தில்  சங்கமமாகிறது.

சங்க  இலக்கியங்களில்  வைகை ஆறு பற்றிய  குறிப்புக்கள் பலவற்றை பார்க்கலாம்.  வைகை நதி எப்படி தோன்றியது என்பது பற்றிய பாரம்பரிய  கதைகள்  பல உள்ளன. சுருளியாறு,  முல்லையாறு,  வராகநதி,  மஞ்சள்  ஆறு, கிருதுமால்நதி  ஆகியவை அனைத்தும்  வைகை யாற்றின் துணையாறுகள். இவற்றில்  கிருதுமால் நதியைத்தவிர  தேனீ  மாவட்டத்திலுள்ள  வைகை அணைக்கட்டுப்  பகுதியில்  இவை ஒன்றாக சேர்கின்றன.  கிருதுமால் மட்டும் மதுரையில்   இணைகிறது.

ஆயினும்  வைகை நதிக்கு  பெரும்பகுதி  நீர் கேரளாவின்  குமுளி என்னுமிடத்திலுள்ள ‘பெரியார்’ அணைக்கட்டிலிருந்துதான்  கிடைக்கிறது.

கேரளாவின்  ‘பெரியார்’  ஆற்றிலுள்ள தண்ணீர்  மேற்கு மலைத்தொடரிலிருந்து  பெரும்  குழாய்களின் வழியாக  தண்ணீர்  வைகை ஆற்றை அடைகிறது.

கோடைக்காலங்களில்  வைகை நதி  எப்போதும் வறண்டே இருக்கும்.  பெரும்பாலான   ஆண்டுகளில்  வைகையில்வரும்  தண்ணீர் மதுரையைத் தொடாமலே  காய்ந்து போகும்.

தேனி  மாவட்டத்தில்   பெரியகுளம்  வட்டத்தில்  வைகை ஆற்றின்  குறுக்கே  கட்டப்பட்டுள்ளது  வைகை  அணை.

மதுரை மற்றும்  திண்டுக்கல்  மாவட்டங்களில்  குடிநீர்த்  தேவையையும்,  பாசனத் தேவையையும்  பூர்த்தி செய்யும் பணியைச்   செய்கிறது  வைகை ஆறு.

‘பெரியார்’  அணைக்கட்டு;  1895 ஆம் ஆண்டு “ஜான் பென்னி குயிக்” என்ற வெள்ளைக்காரரால்  உருவாக்கப்பட்டது.  திருவாங்கூர்  ராஜ்ஜியத்தின்  வேண்டுகோளின்படி  பிரிட்டிஷ்  ராணுவத்தைச்  சேர்ந்த  பொறியாளர்கள்  இதனை கட்டி முடித்தார்கள். அடுத்து வந்த வெள்ளம்  அந்த  அணைக்கட்டை  சுத்தமாக   துடைத்தெறிந்தது.

மீண்டும் இந்த அணையைக் கட்ட  அரசு மறுத்து விட்டது.  ஜான் பென்னி  குயிக் தனது சொந்த ஊர் இங்கிலாந்துக்குப் போய் தனது பூர்வீக சொத்துக்;களை  விற்று பணம் சேகரித்துக் கொண்டு வந்து  இந்த அணையை இரண்டாவது முறையாகக்  கட்டி முடித்தார்.

அதனால் ஜான் பென்னி  குயிக்  என்ற பெயர் இங்கு  மிகவும் பிரபலம்.  அதனால்தான் இன்றும் கூட ஒவ்வோர் ஆண்டும்  மதுரை மற்றும்  தேனி  மாவட்டத்தை  சேர்ந்த விவசாய குடும்பங்கள்  அவருக்கு விழா  எடுக்கின்றன.
மதுரை, தேனி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜான் பென்னி குயிக் என்று பெயர் வைப்பது சாதாரணம். கருப்புசாமி, மதுரை வீரன் மாதிரி ஜான் இங்கு காவல் தெய்வம் ஆகிவிட்டார்.
13. தாமிரபரணி

பொதிகை மலையில் தோன்றி கிழக்கு முகமாய் பாயும் தாமிரபரணி ஆற்றின் சங்ககால பெயர் பொருநை நதி.

14. பெண்ணையாறு

கர்னாநாடகா மற்றும் தமிழ்நாட்டில் மொத்தம் பயணம் செய்யும் தொலைவு 400 கிலோமீட்டர். சின்னாறு[1], வாணியாறு, பாம்பாறு ஆகியவை இதன் துணை ஆறுகள். சின்னாறு மைசூரில் புறப்பட்டு தமிழ்நாட்டில் வேப்பனபள்ளி என்னும் இடத்தில் பெண்ணையாற்றுடன் கலக்கிறது. வாணியாறு சேர்வராயன் மலைத் தொடரில் உற்பத்தி ஆகி பூங்கரம்பள்ளி ரிஸ்ர்வ் பாரெஸ்ட் அருகில் பெண்ணையாற்றுடன் சேர்கிறது.

15. வைப்பார்

கேரள மாநிலத்தின்  எல்லையில் அமைந்துள்ள  மலைச்சரிவில்  உற்;பத்தி ஆகி  தேனீ,  விருதுநகர் மாவட்டங்களில்  பயணம் செய்து  தூத்துக்;குடியிலிருந்து  40 ஆவது கி.மீ. ல்(25 மைல்) வலப்புறம்  உள்ள மன்னார்  வளைகுடாவில்  சங்கமிக்கிறது: இதன் மொத்த நீளம் 130 கி.மீ. (81 மைல்);  நீர்வடிப் பகுதி பரப்பு (DRAINAGE BASIN )5288. ச.கி.மீ. (2402. ச.மைல்)         

16. திருமணி முத்தாறு

ஏற்காடு  சேர்வராயன் மலைப்பகுதியில்  மஞ்சவாடி என்னுமிடத்தில்  உற்பத்தியாகிறது திருமணி முத்தாறு. சேலம் இ நாமக்கல்  மாவட்டங்களில்  பாய்ந்து  ஓடி நாமக்கல் மாவட்டத்தில் நஞ்சைஅடையார்  என்னுமிடத்தில் காவிரியில்  கலக்கும் இந்த ஆற்றின் மொத்த நீளம்  120 கி.மீ. (82 மைல்).
மஞ்சவாடி ஏற்காடு மலை, சேலம் நகரம்,  வெண்ணாண்டூர்,  நஞ்சை அடையார்,  ஆகிய இடங்கள்  திருமணி முத்தாறு  ஆற்றங்கரையில் அமைந்துள்ள  முக்கிய இடங்கள்.

17. திருமலைராஜன் ஆறு

தமிழ்நாட்டில்  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய  மூன்று மாவட்டங்களிலும்,  புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும், பாயும்  திருமலைராஜன் ஆறு குடமுருட்டி ஆற்றின் கிளை ஆறு. காவிரியின் துணையாறு.  தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகில்  ராஜகிரி என்ற இடத்தில் துணை ஆறாக  ஓடி காரைக்கால்  மாவட்டத்தில் திருமலைராஜன்  பட்டினம் என்ற இடத்தில்  கடலில் சங்கமமாகிறது. திருமலைராஜன்  ஆற்றுப்பாலம் 150 ஆண்டுகள் பழமையானது இன்றும்  இந்த ஆற்றில்  உள்ளது.

18. சிற்றாறு ஆறு
                      
குற்றாலம் மலையில்  உற்பத்தியாகி  அதன் துணையாறுகளுடன் இணைந்து நெளிவு சுளிவுகளோடு  ஓடி  அழகு கொஞ்சும் ரம்மியமான நீர்வீழ்ச்சிகளாகக் குதித்து முக்கிய பாசன நதியாக தன் பயணத்தைத் தொடர்கிறது. தாமிரபரணி ஆற்றின் முக்கியமான துணையாறு.
 
பதினேழு அணைக்கட்டுகளுடன்   8903  எக்டர்  (22000ஏக்கர்) விவசாய நிலங்களுக்கு  பாசனநீர் தரும் சிற்றாறு.  இறுதியாக தாமிரபரணியின்  கரம்பற்றும் துணையாறாக  தன் பயணத்தை நிறைவு செய்கிறது.

80  கி.மீ. ஓடும் இந்த ஆறுஇ தாமிரபரணியின் முதல் துணையாறு.  ஆதற்கு  முன்னதாக அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு  293  எக்டர்   (720  ஏக்கர்)  பரப்பிற்கு பாசனம்  அளிக்கிறது. அதன் மற்றொரு  துணையாற்றின் மீது  கட்டப்பட்டுள்ள  அணைக்கட்டு  192 எக்டர் ( 350 ஏக்கர்)  பரப்பிற்கு பாசனம் அளிக்கிறது . இதன் அடுத்த உபநதியில்  7 அணைக்கட்டுகள்  மற்றும் ஒரு நீர்த் தேக்கமும் 465 எக்டர்  (1150  ஏக்கர்) பரப்பில்  விவசாய நிலங்களுக்கு   பாசனம்  அளிக்கிறது.

19. சங்கராபரணியாறு

விழுப்புரம்   மாவட்டத்தில்  செஞ்சி மலைத் தொடரின், மேற்கு சரிவில் உற்பத்தியாகிறது  சங்கராபரணி ஆறு. பச்சமலை,  மேல்மலையனூர்  மலைச் சரிவுகளிலிருந்தும்  வரும் நீர்  தென்பாலை  என்னுமிடத்தில்  சங்கராபரணியுடன்  சேர்கிறது.

வராக நதி, செஞ்சி  ஆறு  என்னும் இரண்டு செல்லப் பெயர்களும்  உண்டு இதற்கு கிழக்கு  நோக்கி ஓடுகிறது சங்கராபரணி.   அத்துடன் அன்னமங்கலம்  பகுதியிலிருந்து  வரும் கூடுதலான வடிநீர்  மேலச்சேரி  என்னுமிடத்தில்  சேர்கிறது. பின் தென்புறம் திரும்பி  சிங்வார் கிராமத்தின் கிழக்கு பகுதியில்  பாய்ந்து  மீண்டும் கிழக்கு நோக்கிச்  செல்கிறது.

இதன் இரண்டாவது  துணையாறு நரியார் ஓடை ஊருணித்தாங்கல் கிராமத்திற்கருகில்  சங்கராபரணியுடன் சங்கமமாகிறது.

வல்லம் கிராமத்திற்கு  அறுகே இந்த  ஆறு  தென்கிழக்கு திசையில் திரும்புகிறது.  இத்துடன் வீடூர் என்னுமிடத்தில்  இதனுடைய மூன்றாவது துணையாறு  தும்பியாறு   கலக்கிறது.  இதனை அடுத்து இருப்பதுதான் வீடூர்   நீர்த்தேக்கம்.
 
வீடூர்  நீர்த் தேக்கத்திலிருந்து வெளியேறும்  சங்கராபரணி மீண்டும் தென்கிழக்குப்  பகுதியில்   திரும்பி   ராதாபுரம்  என்னுமிடத்தில்  பம்பையார் என்னும் துணை நதியை  தன்னோடு  இணைத்துக்  கொண்டு அங்கிருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  மணலிப்பேட்டை  என்னுமிடத்தில் நுழைந்து, செல்லிப்பட்டு என்ற இடத்தில பம்பை என்னும் துணை நதியை   துணைக்கழைத்துக் கொண்டு  ஓடுகிறது, சங்கராபரணி.

இதன் கடைசி  துணைஆறு   குடுவையாறு.  இது போட் ஹவுஸ்  அருகில்  சுண்ணாம்பார் என்ற இடத்தில் சேர்ந்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் பயணம் செய்து பேரடைஸ் பீச் என்னுமிடத்தில்  கடலில்  சேர்கிறது.
இந்த ஆற்றின்  நீளம்  78.6 கி.மீ. இதில் 34 கி.மீ புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில் பயணம் செய்கிறது.

அன்னமங்கலம் ஆறு,  நரியார் ஓடை,  கொண்டியாறு, பம்பையாறு, பம்பை,  குடுவையாறு  ஆகிய ஆறு  நதிகள்   சங்கராபரணியின்    துணை ஆறுகள்.
சங்கராபரணி  ஆற்றங்கரையில்  மிகவும் பழமையான கோயில்கள்  எல்லாம் அமைந்துள்ளன.

பாடல் பெற்ற ஸ்தலங்களாக  4 கோயில்கள்  சங்கராபரணி  ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.  கங்கை வராக  நந்தீஸ்வரர் கோயில், திருக்காஞ்சியில் வராக நதிக்கரையில்  அமைந்துள்ளது.  இந்து மதத்தின் நம்பிக்கையின்படி, கங்கை  நதிக்கு  சமமமான சக்தி படைத்தது  சங்கராபரணி  ஆறு.
 ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் மாசிமகத் திருவிழா, தேர்த்திருவிழா உட்பட 10 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும்.
 
சிங்கவரம் ரங்கநாதர்  கோயில், ஈசாலம்  ராமனாதீஸ்வரர்  கோயில்,  திருவாமாத்தூர்  அழகியநாதர் கோயில்,  குறவர்  பனங்காட்டூர், பனங்காட்டீஸ்வரர்  கோயில்,  திருக்காவேரி   சந்திரசேகரர் கோவில்   ஆகியவை  விழுப்புரம்  மாவட்டத்தின்,  சங்கராபரணியின்  விசேஷமான ஆற்றங்கரைக் கோயில்கள்.

மதகடிப்பட்டு,  மஹாதேவர்  கோயில்,  திருபுவனை  பெருமாள் கோயில்,   திருவண்ணார்  கோயில்,  வடுகூர்நாதர்  கோயில்,  வில்லியனூர்  திருக்காமேஸ்வரர்  கோயில்,  திருக்காஞ்சி   காசி  விஸ்வநாதர்  கோயில்  மற்றும்  கங்கை வராக  நாதீஸ்வரர்   கோயில் ஆகியவை   புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில்  சங்கராபரணி  ஆற்றங்கரையில்  அமைந்துள்ள  திருக்கோயில்களாகும்.

வீடூர்   நீர்த் தேக்கம்,  பொறையார் அகரம்,  ஊசுட்  ஏரி     படகுக்  குழாம்,  அரியாங்குப்பம், சுண்ணாம்பார்  படகுக் குழாம்;  ஆகியவை   சங்கராபரணி  ஆற்றங்கரையின்   சுற்றுலா   தலங்கள் ஆகும்.

20. வெட்டாறு

திருவாரூர், தஞ்சாவூர்,  நாகப்பட்டினம் ஆகிய  3 மாவட்டங்களில்  பாயும்   வெட்டாறு காவிரியின் துணைநதிகளுள் ஒன்று.  இது நாகூர் நகரில்  காரைக்கால் கடலில்   சங்கமிக்கிறது.

21. வெண்ணாறு

காவிரி ஆற்றின்  முக்கியமான துணையாறு வெண்ணாறு.  இது திருச்சி  தஞ்சாவூர்  மாவட்டங்களில்  பாய்கிறது.  சோழர்கள்  ஆட்சிக்காலத்தில்  இதனை நீர்வழித்தடமாக  போக்குவரத்திற்கு பயன்படுத்தினார்கள்.

22. வசிஷ்டா  ஆறு

புகழ்பெற்ற  வசிஷ்ட முனிவரின்  பெயரால்   அழைக்கப்படுவது  இந்நதி.; சேலம் மாவட்டத்தில்  உருவாகி  பேத்த  நாயக்;கன் பாளையம்,  ஆத்தூர், வட்டுத்துறை, தலைவாசல்,  ஆரகலூர்,  சித்தேரி மற்றும்  கடலூர் மாவட்டத்தில்  பயணம்; செய்கிறது  வசிஷ்டா  ஆறு.

இது  கடலில்  சங்கமமாவதற்கு   முன்னால்  திருச்சிராப்பள்ளியில்   ஸ்வேதா  நதியைக்  கூடுகிறது.
         
ஆத்தூர் மற்றும் பெரியஏரி பகுதியில் இந்த ஆற்றில்  2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆத்தூர், தலைவாசல், பெரியஏரி  மற்றும் ஆரகலூர்  பகுதிகளில்  தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

வசிஷ்;டா நதியும், ஸ்வேதா நதியும் வெள்ளாற்றின் இரண்டு இணை ஆறுகளாக பாய்கின்றன. கல்வராயன் மலையிலிருந்து வடியும் நீர் வசிஷ்டா  நதியிலும் கொல்லி மலை  மற்றும்  பச்சை மலையிலிருந்து  இறங்கும் நீர்   ஸ்வேதா நதியிலும்  சேர்கிறது.

இந்த வசிஷ்டா ஆற்றங்கரையில் மட்டும் 12  சிவன் கோயில்கள்; அமைந்துள்ளன.
                               
23. செய்யாறு

செய்யாறு என்பது இன்றைய பெயர். ஒரு காலத்தில்  அது சேய் ஆறு.  இதன்பொருள்  குழந்தை ஆறு. ஒரு குழந்தை விளையாடுவதற்காக  உருவாக்கப்பட்ட ஆறு. தன் குழந்தை முருகன் விளையாடுவதற்காக  தாய்  பார்வதி  பூமிப் பந்தின் மீது  தனது திரிசூலத்தால்  கோடிட்டு இந்த ஆற்றினை  உருவாக்கி  தன் மகனிடம் விளையாடக்  கொடுத்தார். இதுதான் சேய் ஆறு புராணம்.

மிகவும் பிரபலமான  4 சைவ முனிவர்களுள்  ஒருவரான  திருஞான சம்பந்தர், ஒருமுறை இந்தக்கோயிலுக்கு வருகை  தந்தார்.  அங்கிருந்த ஆண் பனை ஒன்றை  தனது பாடலால்  பெண்  பனையாக   மாற்றி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

இன்றும் கூட செய்யாறு  புனித ஆறு.  தெய்வத்தன்மை  படைத்த ஆறு.  இதன் பின்புலத்தில்  நுற்றுக்கணக்கான  சுவையான சரித்திரச் சம்பவங்கள்  அடங்கியுள்ளன.

கிழக்கு தொடர்ச்சி மலையின் அழகிய பகுதியாக விளங்கும்  ஜவ்வாது மலைத்;தொடரில்  பிறப்பெடுத்து, அங்கிருந்து திருவண்ணாமலையில்  இறங்கி ஓடி  ஓய்ந்து  வங்காள விரிகுடாவில்  சங்கமமாகும். தனக்கு தேவையான நீரை  வடகிழக்கு மற்றும் தென்மேற்கு  பருவ மழைகளின்  மூலமாக பெறுகிறது.

பாலாற்றின்  துணையாறுகளுள் முக்கியமானது   செய்யாறு. பாலாற்றில் அணைக்கட்டிலிருந்து  அதன் உபரியான நீர்  கொசத்தலை  ஆற்றின் ஆற்றுப் படுகையின், பூண்டி நீர்த்தேக்கத்திற்கும், அடையாறு ஆற்றுப் படுகையின்;   செம்பரம்பாக்கம்   ஆற்றிற்கும்,    விநியோகிக்கப்பட்டது.

தெலுங்கு கங்கைத் திட்டம்  வருவதற்கு முன்னால்  இந்த இரண்டு நீர்த் தேக்கங்கள்தான்  சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்தது.  இந்த  திட்டம் வந்தபின்னால்  பாலாற்றை சென்னை முழுவதுமாக நம்பி இருக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. நாள் ஒன்றுக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர்  சென்னைக்கு விநியோகம் செய்யத் தொடங்கப்பட்டது,                           'தெலுங்கு --  கங்கை   புராஜெக்ட்' என்னும்  அற்புதமான திட்டம்.

கணேசபுரம்  அணைக்கட்டு  பாலாற்றின் குறுக்காக   ஆந்திர அரசால்  கட்டப்படுவது.  குப்பம் அருகே அமைந்துள்ள இந்த அணைக்கட்டை  எதிர்த்து, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளுர்  மற்றும் சென்னையை சேர்ந்த  பொதுமக்கள் போர்க்கொடி   உயர்த்தி உள்ளனர்.

காவேரி  ஆற்றுப்பிரச்சனைக்கு அடுத்தபடியாக   பாலாற்றின் பிரச்சனையும் கர்நாடகாவிலும்  தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கொழுந்துவிட்டு எரிகிறது.  ஆனால் எப்போதாவது ஒருமுறை என்றால் கூட  இந்த ஆறுகளில் உபரியாகச் செல்லும்  நீரை  தேக்கி வைக்கும்  நீர்த்தேக்கங்களை  நிறைய அமைப்பதன் மூலம் இந்தப்  பிரச்சனையை சுமூகமாகத்   தீர்க்க  முடியும்.

மழைநீரில்   ஆறில் ஒரு பங்கு நீர்  ஆற்றில்  ஓடுகிறது.  ஒரு பங்கு  நிலத்தடி  நீராக சேர்கிறது.  மீதமுள்ள 4 பங்கு நீர் அவ்வித பயனுமின்றி நீர்  சேகரத்திற்கு வாய்ப்பின்றி  சேதாரம்  ஆகிறது.  ஒரு பங்கு கடலைச்சென்று   சரணடைகிறது.  இது  என் சொந்தக்  கருத்தல்ல.  தமிழ்நாட்டில்  துவாக்குடியில்  உள்ள நீர்  ஆராய்ச்சி  மையத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு.  இப்படி சேதாரம் ஆகும் நீரை  சேகரிக்க  நாம் என்ன செய்யப் போகிறோம் ?

பருவகால மழைநீரை  எடுத்துச் சென்று திருவண்ணாமலை  மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி  மற்றும் எண்ணற்ற கிராமங்களுக்கு  தந்து  விவசாயத்திற்கு உயிர்நாடியாக  விளங்குவது செய்யாறு.

செய்யாறு ஆற்றங்கரையில்தான்  அமைந்துள்ளது  வேதகிரீஸ்வரர்  ஆலயம்.  வேத நடேஸ்வரர்  கோயில்  என்பது  இதன் பழைய பெயர்.

23. பச்சையார் ஆறு

பச்சையாறு  மேற்கு மலைத்தொடரின்  கிழக்கு சரிவில் உற்பத்தியாகி  தாமிரபரணி ஆற்றுடன் சேரும்.  தாமிரபரணியின்; துணையாறு இது.  பச்சையாற்றின் தண்ணீரை 9 அணைக்கட்டுகள் தேக்கிப் பிடிக்கின்றன.

24. கொசத்தலையார்  ஆறு

இப்போதைய கொசஸ்தலை ஆறுதான் சுமார் 100  ஆண்டுகளுக்கு முன்  குடித்தலை ஆறு. இதையே கொற்றலையாறு என்றும் சொல்லுகிறார்கள். 1886 ஆம் ஆண்டு   வாக்கிலேயே  கொசஸ்தலையாறு சென்னைக்கு குடிநீர் கொடுத்துதவி செய்ததாம்.

இந்த ஆற்றிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தண்ணீர்  சோழவரம்  புழல் ஏரிகளில் தேக்கிவைத்து முதலில் கீழ்ப்பாக்கம் வரை கொண்டு சென்றார்கள். அதன்பிறகு இந்தத் தண்ணீருடன் மருந்து கலந்து  28 அடி  உயரத்தில் அமைக்கப்பட்ட 15 லட்சம்  காலன்  பிடிக்கும்  மேல்நிலைத் தொட்டியில்  நிரப்பி   சென்னை நகரின் மாடிவீடுகளிலும், தண்ணீர் கிடைக்கும்படி  விநியோகம் செய்யப்பட்டதாக  “சென்னை மாநகர் என்னும் புத்தக ஆசிரியர்  இது பற்றி  விளக்கமாக எழுதியுள்ளார்.

1922 ஆம் ஆண்டு 5.25 லட்சமாக  இருந்த சென்னை  மக்கள் தொகை  1941  ல்  7¾  லட்சமாக  அதிகரித்தது.  குடிநீர்த்தேவையும் அதிகரித்தது. அதனை ஈடுசெய்ய அன்றைய நகராண்மைக் கழகத்தின்  நகரத்  தந்தை  எஸ். சத்யமூர்த்தி 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  பூண்டி நீர்த்தேக்கம் கட்டுமானத்தைத் தொடங்கி  1944 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் இழுபறி இல்லாமல் கட்டி முடித்தார். இதன் கொள்ளளவு  25,000.  மில்லியன் கனஅடி. இது  சோழவரம்  புழல் ஏரிகளின் மொத்த கொள்ளளவிற்கு   சமமானது. 

திருவள்ளுர் மாவட்டத்தில்  பள்ளிப்பட்டு பகுதியில் உற்பத்தியாகி 136 கி.மீ  பயணம் செய்து  கிழக்கு முகமாக ஓடி  வங்கக் கடலில் சங்கமமாகிறது.

இந்த ஆற்றின் வடதிசையில்  ஓடிவரும் முக்கிய உப நதி நகரி ஆறு:  ஆந்திர மாநிலத்தின்  சித்தூர் மாவட்டத்தில்  உற்பத்தியாகி  பூண்டி அணைக்கட்டு பகுதியில்  கொசத்தலை ஆற்றுடன் சேர்கிறது.  பின்னர் அது சென்னைப் பெரு நகரில்  நுழைந்து எண்ணூர் ஓடையின் வழியாக வங்கக்கடலில்  கலக்கிறது.
தாமரைப்பாக்கம்  மற்றும் வள்ளுர்  என்ற இரு  இடங்களில் இந்த ஆற்றின்  குறுக்கே  இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன: இதன்    மொத்த  நீர் பிடிப்பு பகுதி 3,757 ச.கி.மீ. இதன் நீரோட்ட அளவு (DISCHARGE CAPACITY) ஒரு வினாடிக்கு 1,10,000 கியூபிக் மீட்டர்.

பெருமழைக் காலத்தில் மிகையான நீர்வரத்து  பூண்டி நீர்த் தேக்கத்தில்  ஏற்படும் போது  அதனை கொசத்தலை ஆற்றில் வடிக்கிறார்கள்.  இது கொசத்தலை ஆற்றின்  வழியாக  எண்ணூர் சிற்றோடையில்  கலந்து வங்கக் கடலை  அடைகிறது.

கொசத்தலை ஆற்றின்  உப ஆற்றுப் படுகையில் (RIVER SUB BASIN)  சுமார் 200 ஏரிகள்  அயம்வாம்   திட்டத்தின் மூலம் சீரமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது.  கழிமுகத்தில் (MOUTH OF RIVER) மணல்மேடு வருவதைத் தடுக்க  (FORMATION OF SAND BARS)  தடுப்புச் சுவர் (GROYNES) அமைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நீர் வள ஆதாரத்தை 300 மில்லியன்  ரூபாய்ச் செலவில்  இந்த ஆற்றில் திருவள்ளுர் மாவட்டத்தில்  வண்டிக்காவனூர்  கிராமத்தில் ஒரு தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இது சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்  காரனோடை  மேம்பாலத்தின்  அருகாமையில்  அமைய உள்ளது. இந்த தடுப்பணையின் அகலம்  300 மீட்டர்,  உயரம்  6.3 மீட்டர்.    இதன்மூலம் சுமார் 10 கி.மீ.  தொலைவிற்கு நீரை சேமிக்க முடியும்.

26. கடனாநதி

திருநெல்வேலி   மாவட்டத்தில்  ஓடும் ஆறு கடனார் நதி:   கருணை ஆறு  என்றும் இதனை அழைப்பர்:  பொதிகையில்  பொதிந்திருக்கும் அகத்திய  மலையில்   உருவாகிறது:  இதற்கு 5 துணையாறுகள்  உள்ளன: அவை   கல்லார், கருணையார்,  வீர நதி,  ஜம்பு நதி,  மற்றும் ராமநதி. கடனார் நதி  உற்பத்தியான  இடத்திலிருந்து 43 கி.மீ. பயணித்து திருப்புடை மருதூர்;  என்னும்  கிராமத்தில்  தாமிரபரணி நதியுடன் சேர்ந்து  தனது தனிப்பட்ட பயணத்தை   முடித்துக் கொள்கிறது.
 
திருப்புடைமருதூர்  என்னும் கிராமத்தில்  தாமிரபரணியுடன்   சங்கமமானதை அடுத்து  கரையின் இருமருங்கிலும், அமைந்துள்ளவை  அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி நகரங்கள்.

கீழாம்பூர் என்னுமிடத்திலிருந்து   வடகிழக்கு திசையில்  1½  கி.மீ.   தொலைவில் கடனார் நதியின் துணையாறுகள் கல்லார்,  கருணையார்,  வராகநதி ஆகியவை சங்கமமாகின்றன.

கடனா நதியில்  ஆறு அணைக்கட்டுக்களும்  ஒரு நீர்த்தேக்கமும்  அமைந்துள்ளன.  இந்த நீர்த் தேக்கத்தின்  கொள்ளளவு  99 லட்சத்து  70  ஆயிரம்  கியூபிக்  மீட்டர். (8,000 ஏக்கர் அடி) இதன்  மூலம்  38.87 ச.கி.மீ. பரப்பில், பாசனத்திற்கு தண்ணீர்   தருகிறது.

அரசப்பட்டு அணைக்கட்டு,  ஆழ்வார்குறிச்சி  தேங்கல்  அணைக்கட்டு,  பஞ்சப்பள்ளி அணைக்கட்டு,  காங்கேயம்  அணைக்கட்டு,  காக்கவல்லூர்   அணைக்கட்டு,  ஆகியவை ஆறும்  கடனார்  நதியின் மீது  அமைந்துள்ளவை.
சாம்பன் குளம்,  சிவசைலம்,  கருத்தபிள்ளையூர்,  பூவன்  குறிச்சி,  கீழாம்பூர்  ஆகியவை  கடனார் நதிக்கரை  நகரங்கள்.

கடனார் நதியின் நீர்த்தேக்கம்  திருநெல்வேலி நகரின் அழகிய  ஓர்  சுற்றுலா  தலம்.  இது மேற்கு மலைத் தொடர்ச்சியில்  ஆழ்வார் குறிச்சிக்கு அருகாமையில் சிவசைலம்  கிராமத்தில்  அமைந்துள்ளது.  குற்றாலம் மற்றும்  சபரிமலை சீசன்களில்  இங்கு  சுற்றுலா  பயணிகள் கூட்டம்  நிரம்பி வழியும்.

 
குறிப்பு: 26 ஆறுகள் பற்றிய தகவல்கள் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஆறுகள் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் படிக்கலாம் - கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை gsbahavan@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம்-ஆசிரியர் 

[1] சின்னாற்றின் இன்னொரு பெயர் மார்கண்டா நதி

ஆதாரம்:1. தமிழ் நாட்டு வரலாறு தொல் பழங்காலம், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1975 2.விக்கிபீடியா வலைத்தளம்

(குறிப்பு: கட்டுரை பற்றிய தங்கள் கருத்தினைத் தெரிவியுங்கள்







1 comment:

sluxtpr said...

தகவலுக்கு நன்றி..

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...