Friday, January 3, 2014

தினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி GROW VEGETABLES GROW RICH




தினசரி வருமானம் பெற

காய்கறி சாகுபடி


grow vegetables
GROW RICH

வருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்டும்.

உலக அளவில் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது சீனா.

2009 ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 7.958 மில்லியன் எக்டரில் 133.74 மில்லியன் டன் காய்கறிகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.

தமிழ்நாட்டின் மொத்த காயகறி சாகுபடி பரப்பளவு 2.63 லட்சம் எக்டர்

இந்தியாவில் ஒரு எக்டரில் காய்கறி மூலம் கிடைக்கும் சராசரி விளைச்சல் 16.7 டன்.

ஆனால் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் ஒரு எக்டருக்கு 28.9 டன்

ஒரு நாளைக்கு ஒரு நபர் சாப்பிடும் காய்கறிகளின் அளவு 210 கிராம்
சிபாரிசு செய்யப்படும் அளவு 300 கிராம்.

சுமார் 50 வகை காயகறிகளை நாம் பயிர் செய்கிறோம்

தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, கொடிவகைக் காய்கள், வெங்காயம், முட்டைக்கோசு, பூக்கோசு, கேரட், பீட்ரூ;ட், கிழங்குகள், முருங்கை, கீரைகள் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய காயகறிகள்.

நாம் ஏன் காய்கள் சாகுபடி செய்ய வேண்டும் ?

தினசரி வருமானம், கூடுதல் லாபம், அதிக வேலை வாய்ப்பு, குறுகிய பயிர் வயது, மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு, ஏற்றுமதிக்கு வாய்ப்பு, இவை எல்லாமே காய்கறி சாகுபடியில் பிரகாசமாக உள்ளது.

அதுசரி, காய்கறி சாகுபடியில் அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் ?
உயர் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.

உயர் தொழில் நுடபங்கள் என்றால் என்ன ?

வீரிய ஒட்டு ரகங்களை தெரிந்தெடுத்தல், குழித்தட்டு நாற்றங்கால் முறையை கையாளுதல், சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், பாசனம் அளிக்கும் நீருடன் கலந்து உரமிடுதல் , பசுமைக் கொட்டகையில் சாகுபடி செய்தல், நிழல் வலைக் கொட்டகை அமைத்து பயிர் செய்தல்.

தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பூசணி, சுரைக்காய், கோவைக்காய் ஆகியவற்றில் என்னென்ன உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

கோ.டி.எச். 2 வீரிய ஒட்டுத் தக்காளி

செடிகள் 80 முதல் 85 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 60 முதல் 70 கிராம் எடையுடன், உருண்டை அல்லது நீள் உருண்டை  வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.

கோ.டி.எச். 3 வீரிய ஒட்டுத் தக்காளி

செடிகள் 90 முதல் 95 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 55 முதல் 60 கிராம் எடையுடன், உருண்டை  வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு, மற்றும் வைரஸ் நோய்க்கும் எதிர்ப்புத் திறனும் வேர் முடிச்சு நூற்புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.

வீரிய ஒட்டுக் கத்தரி கோ.எ.பி.எச்.

இறைவையில் தை, சித்திரைப் பட்டங்களில் பயிர் செய்யலாம். சமவெளிப் பகுதிக்கு ஏற்றது. காய்கள்  கருமை கலந்த ஊதா நிறத்தில் பளபளக்கும். காய் ஒன்று எடை 55 முதல் 60 கிராம் இருக்கும். காய்கள் கொஞ்சம் நீளமான வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டுப்புழு மற்றும் வைரஸ் நோயக்கு எதிர்ப்புத் திறன் உள்ளது. ஒரு எக்டரில் 58 முதல் - 60 டன் விளைச்சல் தரும்.
கோ.1 - வீரிய ஒட்டு மிளகாய்

இறைவை பயிர். பச்சை மிளகாய்க்கும் ஏற்றது. வற்றல் மிளகாய்க்கும் பயிர் செய்யலாம். பழம் அழுகல் நோயை மிதமாக எதிர்க்கும் திறன் கொண்டது.

ஜுன் முதல் ஜுலை, செப்டெம்பர்  முதல் அக்டோபர், ஜனவரி முதல் பிப்ரவரி, எந்த பட்டத்திலும் போடலாம்.

 எக்டருக்கு பச்சை மிளகாய் 28.10 டன்னும், வற்றல் மிளகாய் 6.74 டன்னும் மகசூல் தரும்.

கோ.எச்.எச்.1 - வீரிய ஒட்டு வெண்டை

இறைவைக்கு ஏற்றது. ஆடி தைப்பட்டம் மற்றும் சித்திரைப் பட்டங்கள் ஏற்றவை.

எக்டருக்கு 22.1 டன் நீளமான பச்சை நிறக்காய்கள் தரும். குறைந்த அளவு நார்ச்சத்து கொண்டது.

மஞ்சள் நரம்பு தேமல் நோய்க்கு  எதிர்ப்புத் திறன் உடைய ரகம்.

சி.எ.ஜி.எச். 1

வீரிய ஒட்டு சாம்பல் பூசணி

4.5 முதல் 5.0 கிலோ எடையுள்ள காய்களைத் தரும் இந்த இறைவை ரகம் ஒரு எக்டரில் 92.82 டன் மகசூல் தரும். ஆடி மற்றும்  தைப்பட்டங்கள் பொறுத்தமானவை.

ஏற்ற மாவட்டங்கள் - சேலம், ரூடவ்ரோடு, கோவை, கடலூர், நாமக்கல், மதுரை, தேனி, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தூத்துக்குடி,வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில், புதுக்கோட்டை, பெரம்பலூர்,

சி.பி.ஓ.ஜி.எச். 1- வீரிய ஒட்டு சுரைக்காய்

பந்தல் ரகம், ஒரு கிலோ எடையுள்ள நீள் உருளை வடிவ காய்கள் தரும். ஒரு எக்டரில் 79 டன் வரை மகசூல் தரும் பந்தல் ரகம்.

கோவைக்காய் சி.ஜி.4

ஆனைகட்டி பகுதியில் விதைக்கரணை தேர்வு மூலம் கண்டுபிடித்த பந்தல் ரகம். ஆண்டுக்கு ஒரு முறை கிளை நேர்த்தி செய்தால் பல்லாண்டு பயிராகும்

 ஒற்றைச் செடி - 36.7 கிலோ என்ற அளவில் ஒரு எக்டரில் ஒரு ஆண்டில் 83.9 டன் வரை மகசூல் தரும்.

நீளமானவை பச்சை நிற காய்களின் மேல் வெள்ளை நிறக் கோடுகள் தென்படும்.

அடுத்த பகுதியில் சொட்டுநீர்ப் பாசனம், குழித்தட்டு நாற்று உற்பத்தி பற்றி பார்க்கலாம்.

தேவ.ஞானசூரிய பகவான், ஆசிரியர், விவசாய பஞ்சாங்கம்




No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...