Thursday, January 2, 2014

இயற்கை விவசாய விஞ்ஞானி டாக்டர்.ஜி. நம்மாழ்வார் - DR. NAMMAZHVAR FATHER OF ORGANIC FARMING



இயற்கை விவசாய 

விஞ்ஞானி

டாக்டர்.ஜி. நம்மாழ்வார்

 

DR.G.NAMMAZHVAR

FATHER OF 

ORGANIC FARMING

 

 "தன்னிறைவு என்பது 

சொந்தக்காலில் நிற்பது "

டாக்டர்.ஜி. நம்மாழ்வார் 1938 ம் ஆண்டு பிறந்தவர். இயற்கை விவசாயத்தின் தீவிர பிரச்சாரகராக அறியப்பட்டவர்.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்து சிதம்பரம் அண்ணாலைப்பல்கலைக் கழகத்தில் பி எஸ்ஸி அக்ரி பட்டப்படிப்பு படித்தவர்.

விவசாய பட்டதாரியான அவர் கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு விஞ்ஞானியாக 1963 ம் ஆண்டில் தன் பணியைத் தொடங்கினார்.

கோவில்பட்டி நிலையம் மானாவாரி  பயிர்களை ஆராய்ச்சி செய்துவரும் ஒரு மையம்.  இங்கு குறிப்பாக மானாவாரி பருத்தி தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன.

அவற்றுள் பயிருக்குப் பயிர் எவ்வளவு இடைவெளி கொடுக்க ​வேண்டும் ? எவ்வளவு ரசாயன உரம் போட வேண்டும் ? எந்த பூச்சிக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் ? “ என்பது போன்ற ஆராய்ச்சிகள் அங்கு நடந்து வந்தன.
இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் ஏ​ழை எளிய மானாவாரி விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணம் நம்மாழ்வார் மனதை அரித்து வந்தது,. இதுபற்றிய தனது கருத்தை சக விஞ்ஞானிகளிடம் தெரிவித்து அதனை மாற்றி அமைக்க வேண்டிய அவசியத்தையும் கூறி வந்தார்.

ஆனால் அவரகள் இவரை வேற்று கிரகத்து மனினைப்போல பார்த்தார்கள். ’சொல்ற வேலையப் பாத்தமா சம்பளத்தை வாங்கிட்டுப் போவமா ? அ​தை விட்டுட்டு ’ என்று இவரை கிண்’டலடித்தார்கள். அதைப்பற்றி கவலைப்படாத நம்மாழ்வார் தனது போர்க்கொடியை உயர்த்தினார்.

நரி வலம்போனால் என்ன ? இடம்போனால் என்ன ? என்று சராசரியாக இருக்கமுடியாத கோபக்கார இளைஞராக இருந்த நம்மாழ்வார். தான்செய்து வந்த வேலை யாருக்கும் பயன் தராது என்று கருதியதால் .கால்கடுதாசியில் ராஜினாமவை எழுதித் தந்துவிட்டு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1969 ல் தன் நடை​யைக் கட்டினார்.

தன் மனதிற்கு பிடித்து இருந்அதன் பிறகு  ‘அய்லண்ட் ஆஃப் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து சுமார் 10 ஆண்டுகள் களக்காடு வட்டாரத்தில் பணியாற்றினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு வட்டாரத்தில் விவசாயிகள் மத்தியில் சேவைசெய்துவந்த அந்த பத்தாண்டு அனுபவம்தான் அவரை பின்னாளில் ஒரு இயற்கை விவசாய போராளியாக மாற்றியது.

காசுகொடுத்து வாங்கிப் பயன்படுத்தும்  இடுபொருட்களை  குறைத்து விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் முறைகள் அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்தன.

1970 ம் ஆண்டுக்குப் பின்னால் பவுலோபெரிற் மற்றும் வினோபா அவர்களின் சித்தாந்தங்களால் அவர் வழிநடத்தப்பட்டார். அதனடிப்டையில் அவர் தனக்கென கீழ்கண்ட சில கொள்கைளை வகுத்துக்கொண்டார்.

‘கல்வியின் பயன் என்பது சுதந்திரம். சுதந்திரம் என்பது தன்னிறைவு அடைந்து தன்னுடைய சொந்தக் காலில் நிற்பது என்று அர்த்தம். அன்றாட உணவுக்காக ஒரு மனிதன் யாரையும் அண்டிப் பிழைக்காமல் இருப்பதுதான் தன்னறைவு. தனக்குத் தேவைப்படும் அறிவினை அனுபவங்ளைத் தானே திரட்டிக்கொள்ளும் சக்தி அவனுக்கு வேண்டும். தன்னையும் தன் சிந்தனையையும் தன் உணர்வுகளையும் ஆளுமை செய்யும் திறன் அவனிடம் இருக்க வேண்டும்.’

அவர் தன்னடைய கொள்கைகளை, விவசாயிகள் மத்தியில் பிரபலமாக்கி பின்பற்றச் செய்ய வேண்டும் என விரும்பி, 1979 ம் ஆண்டு ‘ குடும்பம் ’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

தனது புதியகொள்கைகளின் அடிப்டையில் மக்கள் பங்கேற்பு முறைப்படி கிராமப்புற விவசாயிகளுடன் விவாதித்து அவர்களுடைய தேவை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய பயிர் சாகுபடி முறைகளை வடிவமைத்தார். இவற்றின் அடிப்படையில் விவசாயிகள் தன்னிறைவு அடைய வேண்டும் என்பது அவர் விருப்பம்.

1987 ம் ஆண்டில் நெதர்லாண்டில் உள்ள இ டி சி பவுண்டேஷன் என்னும் அமைப்பு நடத்திய நான்கு வார பணிமனையில் நம்மாழ்வார் கலந்துகொண்டார்.

1990 ம் ஆண்டு குறைவான இடுபொருட்களை பயன்படுத்தும் நீடித்த விவசாய முறைகளை ‘ ( LOW EXTERNAL INPUT FOR SUSTAINABLE AGRICULTURE ) செயல்படுத்தக் கூடிய கூட்டமைப்பைத் (NETWORK) தொடங்கினார். இதனை லீசா (LIISA) என்று அழைத்தனர்.

ஆங்கிலத்தில் ‘சஸ்டெய்னபிள் அக்ரிகல்ச்சர்’ என்றால் நீடித்த வேளாண்மை என்று பொருள்.. பிரச்சனைகள் பல வந்தாலும் ஏமாற்றாத விவசாயம் என்று அதற்கு அர்த்தம்..

விவசாயத்திற்குத் தேவையான விதை, எரு, உரம், நீர், பூச்சிமருந்து, முதலீடு போன்றவைதான் இடுபொருட்கள் (INPUTS). குறிப்பாக அதிக விலைகொடுத்து வாங்கும் உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை குறைவாக இடவேண்டும் என்பதுதான் லீசா.

ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நிலம், நீர், காற்று மற்றும் இதர இயற்கை வளங்ளை நாசப்படுத்திவிடும் என்பது ஒன்று, இரண்டாவதாக இவை சாகுபடி செலவை உயர்த்தி, விவசாயத்தை லாபமில்லாத்தொழிலாக மாற்றி விவசாயிகளை கடனுக்குள் தள்ளிவிடும்.

1999 ம் ஆண்டு மானாவாரி பயிர் சாகுபடிக்கான இயற்கை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கினார்.

இந்த காலகட்டத்தில் புதுவை ஆரொவில்’ லில் பணிசெய்த பெர்னார்ட் டி கிளார்க் என்பவருடன் இணைந்து நீடித்த சுற்றுச்சூழலுக்கான புதிய விவசாயம் என்னும் (A R I S E) திட்டத்தில் பணிபுரிந்தார்.

இதுவும் இயற்கை வேளாண்மை சார்படைய ஒரு திட்டம்தான். இந்தத் திட்டத்தின் உதவியுடன் இந்தியா முழுவதும் பயணம்செய்து நீடித்த வேளாணமைக்கான வழிமுறைகளை பிரச்சாரம் செய்தார்.

2004 ம் ஆண்டு சுனாமியினால் தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் சிதைந்து சீர்குலைந்தபோது நாகப்பட்டினம் பகுதியில் பல கிராமங்களில் நடைபெற்ற நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

2006 ம் ஆண்டு இந்தனேசியா சென்று சுனாமியினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீரமைப்பதற்கான பணிகளைச் செய்ய உதவி செய்தார்.

இயற்கை வேளாணமையில் ஒட்டுமொத்தமாகச் செய்த சேவைகளுக்காக திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் கிராமியப் பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம்கொடுத்துப் பெருமை சேர்த்தது.

நம்மாழ்வார் உலகம் முழுக்க சுற்றி பல நாடுகளில் இயற்கை வேளாண்மை குறித்த தனது அனுபவங்ளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டதுடன் அங்கிருந்த புதிய தகவல்ளைத் திரட்டி, அவற்றை நம்மூர் விவசாயிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் பயிற்சி தந்தார். இயறகை வேளாணமைத் தொடர்பாக நிறைய புத்தகங்ளையும் பத்திரிக்கைகளில் எண்ணற்ற கட்டரைளையும்  எழுதியுள்ளார்.

சமீப காலங்களில் இயறகை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்ளை  உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கரூர் மாவட்டத்தில் சுருமன்பட்டி, கடவூர் ஆகிய இடங்களில் இந்த மையங்ளைத் தொடங்கினார். உலகில் பல பகுதிகளில் செயல்படும் பல அமைப்புளை அத்துடன் இணைக்கும் பணியைச் செய்துவந்தார். 

2013 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் நாள் மீதேன் வாயு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள புதுக்கோட்டை சென்றபோது அவர் அமரரானார்.

‘நீங்கள் வெற்றிகரமான மனிதரா ?’ என்று கேட்டபோது ‘ நான் ஒரு வெற்றிகரமான மனிதனாக வாழ்வதைவிட உபயோகமான மனிதனாக வாழ விரும்புகிறேன்’ என்று சொன்னார், ஆல்பர்ட் ஐன்ஸ்டின். அதுபோல நம்மாழ்வார், விவசாய மற்றும் கிராமப்புற மக்களுக்கு மிகுந்த உபயோகமான மனிதராகவும், வெற்றிகரமான மனிதராகவும் வாழ்ந்து காட்டினார்.

அவருடைய  மறைவினால்  வருந்தும் அவடைய குடும்பத்தினர்க்கும், கிராமப்புற மக்களுக்கும் விவசாய பஞ்சாங்கம் தனது ஆழ்ந்த இரங்லைத் தெரிவித்துக்கொள்ளுகிறது.

அவருடைய வாழ்க்கை இயற்கை விவசாயத்தின் வரலாறாகத் தொடர்கிறது.  

Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.Phone:+91 8526195370, Email:gsbahavan@gmail.com

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...