Monday, December 30, 2013

இஸ்ரேலியர்களின் மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம் - JUDICIAL USE OF WATER BY ISRAELIS

இஸ்ரேலியர்களின்   

மயிர் கூச்செறியும் 

புத்திசாலித்தனம்

JUDICIAL 

USE OF WATER 

BY ISRAELIS 


சொட்டு நீர்ப்பாசனம்தான்  
இன்று  அவர்களுக்கு 
சோறு போடுகிறது.

பல்விளக்கக்கூட பற்றாத தண்ணீரைக் கொண்டு பணம் பண்ணும்   வித்தையை உலக நாடுகளுக்கு சொல்லிக் கொடுத்து கனத்த காசு பார்க்கிறார்கள்  !

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின் பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர்.

இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீ பொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும்.

ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை  இருந்தது.  அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாத தொழில்.

விவசாயம் செய்வதற்கு முன்னர் மரங்கள் அவசியம் வேண்டும், என்பதை மட்டும் உணர்ந்தார்கள். சாலை ஓரங்களில், குடியிருப்புப்பகுதிகளில்,பொது நிங்களில் மற்றும்  பள்ளிகளில் மரங்களை நட்டார்கள்.

ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம், அது தவழ்ந்தால் ஒன்று, நடந்தால் ஒன்று, பிறகு பள்ளியில் சேர்ந்தால், கல்லூரியில் சேர்ந்தால், திருமணம் ஆனால், கார் வாங்கினால், வீடு வாங்கினால், மேலே போக டிக்கெட் வாங்கினால் கூட  ஒரு மரம்  என்று 770 லட்சம்  மரங்களை நட்டு முடித்தார்கள் 12 ஆண்டில்

உலகம், மூக்கின் மீது விரல் வைத்தது !.

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல இஸ்ரேலின் இலுப்பைப்பூ, ஜோர்டான் நதி. அதன் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் மடக்கிப் பிடித்தார்கள். இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே உள்ளது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப்செய்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப்பகுதியில் நம்பிக்கயை மட்டும் முதலாக வைத்து விவசாயம் பார்த்தார்கள்.

இதெல்லாம் மணலை கயிறாய் திரிக்கும் வேலை !

6.25 மில்லியன் எக்டர்  மீட்டர்தான் அந்த நாட்டின் மொத்த நீர்வளம். அது சராசரியாக நம்மூர் பவானிசாகர் அணையில் ஒர்  ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம். இந்த அளவு நீரைக்கொண்டு அவர்கள் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள்.

சாதிக்கப்பிறந்த சம்சாரிகள் !

இஸ்ரேலில் பெரும்பகுதியாய் உள்ள பாலைவனத்தில் கிடைக்கும்  ஆண்டு சராசரி மழை அளவு வெறும் ஐம்பது   மில்லிமீட்டர்தான். தட்டுப்பாடான  தண்ணீரைக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்கள். சொட்டுநீர் பாசனத்தை அறிமுகம் செய்தார்கள். நம்பிக்கை அவர்களை கைவிடவில்லை

சொட்டு நீர்ப்பாசனம்தான்  இன்று  அவர்களுக்கு சோறு போடுகிறது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள அனைத்து  நீர் ஆதாரங்களும் அரசாங்கத்திற்கு சொந்தம். சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் இரண்டில் ஒன்றைத்தான் இஸ்ரேல் விவசாயிகள் பயன்படுத்தமுடியும். விவசாயத் தேவைக்கு ஏற்ப தண்ணீரை அளந்துதான் கொடுப்பார்கள். தேவைக்கு அதிகமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.

பாசன நீரை 10 அடி விட்டமுள்ள குழாய்களில் அதிக அழுத்தத்தில் எடுத்துச் செல்லுகிறார்கள். இந்த நீர் எல்லா பகுதிக்கும் கோவில் சுண்டல் மாதிரி பகிர்ந்து கொடுப்பார்கள்.   நமது நகரங்களில் குடிநீர் விநியோகம் ஆவது மாதிரி.

நம்மூர் ஆட்டோ ரிக்க்ஷாவில் இருப்பதுபோல அங்கும் பாசனக்குழாயில் தண்ணீர் மீட்டர் இணைத்திருக்கிறார்கள்.. ஆனால் மீட்டருக்குமேல் ஒரே ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டார்கள். கறாரான மீட்டர் !

அரிசி, கோதுமை, பயறுவகை ஆகியவை தேவை இருந்தாலும்கூட வருமானம் குறைவு என்பதால் அவற்றை அளவாக செய்கிறார்கள். பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அவர்களின் விருப்பப்பயிர்கள். காரணம் இந்த பயிர்களில்தான் குறைவான தண்ணீர் செலவில் அதிக வருமானம் பார்க்கமுடிகிறது என்பது அவர்களின் கருத்து.

அவர்களுடைய விவசாயம் திடிர் விவசாயம்தான் ஆனால் திட்டமிட்ட விவசாயம்.

அவர்களுக்கு  ஏற்றுமதிதான் குறி.  ஏன் என்றால் உள்ளூர் மார்கெட்டில் ஒரு பழத்தை ஒரு ரூபாய்க்கு விற்றால் ஏற்றுமதியில் 100 ரூபாய்க்கு தள்ளிவிடலாம். 'எந்த பழங்கள் ? எந்த காய்கறிகள் ? எந்த பூக்கள் ? எந்த நாட்டிற்கு  தேவை ?என்ற தகவல் எல்லாம் அவர்களுக்கு விரல் நுனியில்.

ஆனால் ஏற்றுமதிக்குத் தேவை மூன்று விஷயங்கள் ஒன்று தரம் இரண்டு தரம் மூன்று தரம். தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதில் அவர்கள் கில்லாடிகள்.

தரமான பொருட்களை  வாங்க உலக  நாடுகள் நீ நான் என்று க்யூவில் நிற்கின்றன.இங்கு ஒரு விவசாயியின் ஆண்டு சராசரி வருமானம் 66000 யூ எஸ் டாலர். எல்லாம் ஏற்றுமதியின் மகிமைதான் !

இஸ்ரேல் நாட்டின் பரப்பளவு மிகவும் குறைவு. அங்கு உள்ள இயற்கை வளங்கள் அதைவிட குறைவு. உலகில் பல நாடுகளுக்கு  லாபகரமான  விவசாயத்தை சொல்லி கொடுக்கும் நாடாக விளங்குகிறது இன்றைய இஸ்ரேல்.

மனித சமூகத்திற்கு மிகவும் உபயோகமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை தந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் ? என்று நிருபர்கள் கேட்டபோது 'ஒரு சதம்  உற்சாகம் 99 சதம் உழைப்பு' என்றார்.

 அதுபோல இஸ்ரேல் நாட்டுக்காரர்களை கேட்டால்  'ஒரு சதம்  உழைப்பு  99 சதம் நம்பிக்கை ' என்கிறார்கள்..

யூதர்கள் மயிர்கூச்செறியும் புத்திசாலிகள் !

அவர்களுடைய மிகப்பெரிய பலம் பல்விளக்கக்கூட பற்றாத தண்ணீரைக் கொண்டு பணம் பண்ணுவது எப்படி என்ற வித்தையை உலக நாடுகளுக்கு சொல்லிக்கொடுத்து கனத்த காசு பார்ப்பது !

இதுதான் மயிர் கூச்செரியும் புத்திசாலித்தனம் என்பது !  (நன்றி;வெள்ளைக்கால் ரா.கந்தையா )

சாமக்கோடாங்கி சங்கரலிங்கம் 

Sunday, December 29, 2013

வரும் ஆனா வராது





வரும் ஆனா வராது


ஒரு சிறுமி ஒரு பெரிவரிடம் புதிர் போட்டாள். அந்த பெரிவர் அந்த புதிர் 
கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினார். 

"வரும் ஆனா வராது, அது எது ?"

இது தான் அவள் கேட்ட கேள்வி. 

எதோ ஒரு சினிமாவில் வந்த பிரபலமான 'பஞ்ச் டயலாக்' என்பது மட்டும் அவருக்கு தெரிந்தது.

அதற்கு மேல் அவரால் யோசிக்கமுடியவில்லை. 

"இது கூட தெரியலியா?" என்று கேலியுடன் கேட்டுவிட்டு "நானே சொல்லேறன் வரும் ஆனா வராது என்றால் அது மழை." என்று சொல்லிவிட்டு கல கல என சிரித்தாள்.

வரும் ஆனா வராது, அப்படித்தான் மழையை நாமும் புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நம் பெரிவர்கள் தங்கள் அனுபவத்தில் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இன்னும் கூட கிரமத்து பெரிவர்கள், வானத்தை அண்ணாந்து பார்த்து, மேகங்களின் நிறம், அசைவு, சேர்ந்திருக்கும் முறை இதை எல்லாம் வைத்து இன்னிக்கு கண்டிப்பா மழை வரும் வராது என்று சொல்லிவிடுவார்கள்.

இதுதான் பாரம்பரிய அறிவு. இதைத்தான் நாம் ஆங்கிலத்தில் "ட்ரெடிஷனல் நாலெட்ஜ் " என்றும்" இண்டிஜினஸ் நாலெட்ஜ்" என்றும் சொல்லுகிறோம்.

ஆனாலும் மழைக்குக் காரணமாக இருக்கக்கூடிய தென் மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை, குளிர் பருவ மழை, கோடை மழை இது பற்றியெல்லாம் அந்த காலத்து நமது பெரிவர்கள் விரல் நுனியில் நிறைய செய்திகளை வைத்து இருந்தார்கள். அவர்களுடைய அனுபவங்களாக பழமொழிகளை விட்டு சென்றுள்ளார்கள்.

கார்த்திகைக்குப் பின் மழை இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையில்லை.

அந்தி நேரத்தில் தும்பி தாழப்பறந்தால் மழை.

எறும்புகள் திட்டை ஏறிப்போனால் மழை.

இப்படி ஏகப்பட்ட பழமொழிகள் தமிழில். 

மடிக்கணினியை தலையணையாய் பயன்படுத்தும் தகவல் யுகம் இது 
மழை பற்றிய தகவல்களை கண்டிப்பாய் நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

தென் மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்களிலும், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களிலும், குளிர் பருவ மழை ஜனவரி பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களிலும், கோடை மழை மார்ச் முதல் மே வரை மூன்று மதங்களிலும் வரும். 

தென் மேற்கு பருவக்காற்று பூமத்தியரேகைக்கு தெற்கு திசையில் மே மாத வாக்கில் உருவாகி பூமத்தியரேகையைக் கடந்து ஆப்ரிக்க நாட்டின் ஓரமாக பொடி நடையாய் நடந்து ஜூன் மாத வாக்கில் இந்து மஹாசமுத்திரம் மற்றும் அரபிக்கடலில் இருந்து அபரிதமான நீராவியை அள்ளி எடுத்துக்கொண்டு கேரளாவில் இருந்து தன் கருணை மழையை பொழியும்.

இந்தியாவிற்கு கிடைக்கக்கூடிய மழையில் 70 சதவிகிதத்தை தென் மேற்கு பருவ காற்று வழங்குகிறது.  ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பெரும்தூற்றலாக கிடைக்கும் மழை வெறும் 32 சதவிகிதம்தான். 

இந்திய முழுவதற்கும் படியளந்து செல்லும் தென் மேற்கு பருவ காற்று நேராக சீனா வரை சென்று மிச்ச சொச்சமாய் இருக்கும் மழையை உதறி விட்டு மீண்டும் அது வட கிழக்கு பருவ  காற்றாக புதிய அவதாரம் எடுக்கிறது.

வட கிழக்கு பருவ காற்றாக திரும்பி வரும் வழியில் வங்காள விரிகுடா கடலில் தனக்கு தேவையான நீரவியினை கொள்முதல் செய்துகொண்டு ஒரிசா ஆந்திரா என தன் பயணத்தை தொடங்கி அதிகபட்சமான 48 சதவிகித மழையை தமிழ் நாட்டுக்கு அளிக்கிறது.

இவை தவிர குளிர் பருவத்தில் 5 சதமும் கோடை பருவத்தில் 15 சதமும் தமிழ்  நாட்டிற்கு மழை கிடைக்கிறது.

இந்த நான்கு பருவங்கள் மூலம் தமிழ் நாட்டிற்கு ஒரு ஆண்டில் சராசரியாக 942.8 மில்லிமீட்டர்  மழை வரும் ஆனால் வராது. 

மழையின் குணம் வரும் ஆனால் வராது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதை மடக்கிப் பிடித்து மரியாதையாய் மண்ணுக்குள் அனுப்பும் குணம் நமக்கு வருமா வராதா ?
   

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...