ஒரு நாள் ஒரு தேவதை வரும்
குடோ ன்னு சொன்னா போதும் ராஜாவே
எழுந்து நிப்பார். அவ்ளோ மரியாதை. சாதா ஜனங்க பேர்ல உசிரையே வச்சிருப்பார். எப்பவும்
ஒடிகிட்டே இருப்பார்…” இப்படி எல்லோருமே குடோ ஜென் குரு பற்றி பேசுவார்கள்
அவரைத் தெரியாதவர்கள் என்று
யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபலமான ஜென் துறவி. துறவிகளுக்கெல்லாம் தலைமை
துறவி என்று சொல்லுவாங்க.
குடோ ஒரு நாள் கிராமத்துப்பக்கம்
போயிட்டு இருந்தார். நல்ல மழை. வானம் பொத்துக் கொண்டு ஊற்றியது. குடோ மழையில் சிக்கிக்
கொண்டார்.
தொப்பரையாக நனைந்துவிட்டார்.
அந்த நேரம் பார்தது கால் செறுப்பின் வார் அறுந்து போனது. அதனை பழுதுபார்க்க முடியாத
அளவிற்கு பிய்ந்து போனது. அதனால் குடோ அதனைத் தூக்கி எறிந்து விட்டு வெறுங்காலால் நடந்தார்.
அங்கு ஒரு சிறிய வீடு இருப்பதைப்
பார்த்தார். அந்த வீட்டின் வெளியே ஒரு மரத்தால் செய்த ஸ்டேண்ட் ஒன்றில் இரண்டு ஜோடி
செறுப்புகள். அது விற்பனைக்கு என்பது தெரிந்தது. உடனே அந்த வீட்டிற்குப் போனார். விலை
கேட்டார். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பிட்டார்
அப்போது மழை, பேய் மழைபோல
ஊற்றிக் கொண்டிருந்தது. “ஜாஸ்தியா மழை பேயுது இருந்து போங்க சாமி என்றாள் அந்த வீட்டின்
பெண்மணி.
அவரும் “சரி” என்று திண்ணையில்
உட்கார்ந்தார். அப்போது அந்தப் பெண்மனி வயதான தனது தாயாரையும் அவருக்கு அறிமுகப்படுத்தினாள்.
தனது குழந்தைகளையும் அறிமுகம் செய்தாள்.
மழை விடுவதாகத் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் ஜென்குரு புத்தர்சிலையை எடுத்து வைத்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.
பிரார்த்தனை முடிந்த பின்னரும் மழை விடுவதாகத் தெரியவில்லை. “ராத்திரி நேரத்துல நீங்க
எங்க சாமி போகப்போறீங்க இங்கயே தங்கிட்டு காலையில் போங்க” என்றாள் அந்தப் பெண்மணி
“உங்க விட்டுக்காரர் என்ன
செய்யறார் ? எத்தனை குழந்தைகள் ? உங்க விட்டுக்காரர் சம்பாதனை போதுமா ? “ என்றும் கேட்டார்
குடோ
“அதை ஏன் சாமி கேக்கறீங்க.
வேலை முடிஞ்சி வந்தா நேரா சாராயக்கடைதான். நடுராத்திரிக்குதான் ஊட்டுக்கு வரும். ரொம்பக்
குடிச்சிட்டா எங்கயாச்சும் விழுந்து கெடக்கும். நாங்க போயிதான் கைத்தாங்கலா கூட்டிகிட்டு
வரணும்.” குடோ அவர்களுக்கு கேட்கவே சங்கடமாக இருந்தது
மடை திறந்த வெள்ளம் போல அந்தம்மா
பேசிக் கொண்டே போனார். “என்ன வேலை செய்யறார்? தினமும் வேலைக்குப் போறார? எவளோ சம்பளம்
?” என்றார் குடோ
“கூலிதான் சாமி. தினமும் அம்பது
நூறுன்னு கிடைக்கும். அதை வாங்கிகிட்டு அது சாராய கடைக்குப் போயிட்டா, அஞ்சிப்பத்து
கூட எங் கைக்கு வராது.. அஞ்சி புள்ளைங்கள எப்படி காப்பாத்தறது சாமி ?”
“வேலை வெட்டி கிடைக்கலன்னா
ஊட்டுல இருக்கற பாத்திர பண்டங்கள எடுத்துட்டு
போயி அடமானம் வச்சிக் குடிப்பாரு.. ரொம்ப கறாரா கேட்டா.. மட்டு மரியதை இல்லாமப் பேசுவாறு..
மாட்டை அடிக்கறமாதிரி அடிப்பாரு. கையில கிடைச்சதை
எடுத்து அடிப்பாறு.. எம் பையன் வந்து தடுப்பான், அவனையும் அடிப்பாரு..”
அப்போது குடோ அந்தா பெண்ணிடம்
கொஞ்சம் பணம் கொடுத்தார். “சாப்பிடுவதற்கு நிறைய வாங்கிக் கொண்டு வாம்மா” என்றார்.
“நான் இன்று இரவு சாப்பிட்டுவிட்டு இந்தத் திண்ணையில் படுத்துக் கொள்ளுகிறேன்..” என்றார்.
அந்தப் பெண்மணி பழங்கள் ரொட்டி மற்றும் பானங்கள் வாங்கி வந்தார் குடோவிடம் கொடுத்துவிட்டுப்
போனார் அவள் வீட்டிற்குள் சென்றதும் குடோ தனது தியானத்தை மறுபடியும் தொடங்கினார்.
நள்ளிரவு ஆனது. பெருஞ் சப்தத்துடன்
அந்த வீட்டின் கதவு “தடார்” என்று திறந்தது. கதவு உடைந்து விட்டதோ என்று பயந்தார் குடோ.
அந்த வீட்டுக்காரன். அந்த
பெண்மணியின் கணவன். குடிகாரன். வீட்டிற்குள்
வந்தான். சாராயவாடை தூக்கலாக இருந்தது
“பொறுக்கி நாயே எங்கடிப் போன
? அதுகுள்ள படுத்துட்டியா ? எனக்கு யாருடி போடுவான் சாப்பாடு ? உங்கப்பன் வந்து போடுவானா
? ங்கோத்தா வந்து போடுவாளா ? “என்று கேட்டு
குழறிக்குழறிப் பேசினான்.
அப்போது குடோ எழுந்து அவனிடம்
சென்று பேசினார், “நான் ஒரு வழிப்போக்கன். மழை வந்ததால இங்க அனுமதி வாங்கிகிட்டு தங்கிட்டேன்.
உங்களுக்காக ரொட்டி மீன் சரக்கு எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நானும் இன்னும் சாப்பிடல.
உனக்காகத்தான் காத்திருக்கேன் “ என்று சொல்லி அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போனார்.
என்ன ஆச்சரியம் ! அவன் எதுவும்
பேசவில்லை. குடோவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவரை வணங்கினான். குடோவுக்கு ஆச்சரியமாக
இருந்தது.
அவரோடு உட்கார்ந்து வயிறு
முட்ட சாப்பிட்டான். கொஞ்சம் குடித்தான். அவ்வளவுதான்.
அப்படியே சாய்ந்து குறட்டையுடன் தூங்கினான்.
அவரோடு சாப்பிட்டு முடித்த
குடோ தனது தியானத்தைத் தொடர்ந்தார்.
அடுத்த நாள் காலையிலேயே எழுந்து
குளித்துவிட்டுக் கிளம்பினார். அப்போது அவன் கண்விழித்து குடோவைப் பார்த்தான்.
“ஆமா நீங்க யாரு ? எண் வீட்டுல
நீங்க என்ன பண்றீங்க ?” என்று அதிகாரமாகக் கேட்டான், அந்தப் பெண்ணின் குடிகாரக் கணவன்
“குடோ என் பெயர். நான் ஒரு துறவி. கியோட்டோ நகரைச் சேர்ந்தவன் “ என்று
சொல்லிவிட்டு எப்படி இங்கு வந்தார் ? மழை எப்படி வந்தது ? அவர் மணைவி எப்படி அவருக்கு
உதவினாள் ? என்று விளாவாரியாகச் சொன்னார்
“உங்க பேரு எனக்குத் தெரியும்.
ராஜாவுக்கே நீங்க புத்திமதி சொல்லுவீங்க.. நீங்க எனக்குத் தெரியும்..” அதன் பிறகு அவன்
குரலில் பணிவு தெரிந்தது
“என்னை மன்னித்து விடுங்கள்..
தெரியாமல் பேசிவிட்டேன். மரியாதை குறைவாகப் பேசிவிட்டேன்.. என்னை மன்னித்துவிடுங்கள்
நான் உருப்படாதவன். நான் ஒரு குடிகாரன்” என்று சொல்லி அழுதான்
குடோ அவனை சமாதானப்படுத்தினார்
“நீ நல்லவன் உனக்கு நல்லது கெட்டது தெரிகிறது.. உன் மனைவியை குழந்தைகளைப் பார். யார்
அவர்களைக் காப்பாற்றுவார்கள்..” என்று குடோ கேட்க கேட்க அவன் அமைதியாக இருந்தான்
குடோவுக்கு செத்துப்போன அவன்
அப்பா பேசுவது போல இருந்தது குடோ பேசுவது அவன் மானத்தைத் தொடுவது போல இருந்தது
அவர் பேசி முடித்துவிட்டு
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு குடோ அங்கிருந்து கிளம்பினார்
“நான் உங்கள் பைகளை தூக்கிக்
கொண்டு கொஞ்சதூரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மூட்டையாக இருந்த அவருடைய பையினை
அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். பின்னர் குடோ அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு
ஆசி வழங்கினார்
குடோவின் மூட்டையை தூக்கிக்
கொண்டு அவர் பின்னால் நடந்தான் அவன் மனைவியும் குழந்தைகளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்
இப்போது சுமார் 3 மைல் தூரம்
நடந்திருப்பார்கள் “சரிப்பா ரொம்ப மகிழ்ச்சி ! நீ வீட்டுக்கு திரும்பிப் போ “என்று
சொன்னார் குடோ
“உங்க மூட்டை கனமா இருக்கு.
இந்த ரோடும் சரியில்ல. இன்னும் ஒரு அஞ்சி மைல் நான் தூக்கிட்டு வாறேன்” .. என்றான்
அவன்
பாறைபோல இருக்கமாக வறண்டிருந்து
அவன் முகம். அந்த முகத்தில் ஈரம் இல்லாமல் வற்ண்டிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. அமைதியாக
அவர் “சரி” என்றார். வேறு எதுவும் பேசவில்லை.
ஐந்து மைலும் நடந்து முடித்தார்கள்.
“இது போதும் இனிமே நான் என் மூட்டையை சுமப்பேன்.. எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை..
நீ போ உனது மனைவியும் பிள்ளைகளும் உனக்காக காத்திருப்பார்கள்” என்றார் குடோ
இப்போது அவன் குனிந்து குடோவின்
பாதங்களைத் தொட்டு “சாமி என்னை இன்னும் 10 மைல் உங்களோடு வர அனுமதி தாருங்கள். என்னை
விரட்டினால் நான் எங்கே போவேன் ? அது உங்களுக்குத் தெரியும்” என்றான் குடோ எதுவும்
பேசாமல் அவன் முகத்தைப் பார்த்த மறுபடியும் சரி என்றார்
அடுத்த 10 மைல் நடந்து முடிந்தது
இப்போது குடோ கறாரான குரலில் சொன்னார் “இது போதும். நீ திரும்பிப் போ. உன் மனைவியைப்
பார்த்துக் கொள். உன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்..” என்றார். இந்த முறை மிகவும் உறுதியான
கண்டிப்பான குரலில் சொன்னார் குடோ
“சுவாமி இனிமேல் என்னால உங்கள
விட்டு போக முடியாது.. இனி முழு நாட்களையும் உங்களோட தான் இருப்பேன் இனிமே எப்பவும்
உங்களோட தான் இருப்பேன்..” அதற்குமேல் அவனை சமாதனம் செய்ய முடியவில்லை
பல ஆண்டுகள் உருண்டோடின. அந்த
கிராமத்துப் பெண்ணின் குடிகாரக் கணவன் குடோவின் பிரதான சிஷ்யன் ஆனான். மூ நான் என்பது
அவன் பெயர்
மூ-நான் பின்னாளில் குடோ வைப்போல
ஜப்பானில் பெரிய ஜென் குரு ஆனான் அவன் கீழ் நூற்றுக் கணக்கான மாணவர்கள் ஜென் பயிற்சி
பெற்றார்கள்.
“ஒரு நாள் ஒரு தேவதை வரும் காத்திருங்கள். அதன் அழகிய கரங்களைப் பிடித்துக்கொள்ளுங்கள். அது வேறு உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும்” தனது மாணவர்களுக்கு இதைத்தான் காலம் முழுக்க
போதித்து வந்தார்.
பூமி ஞானசூரியன்